Friday, January 24, 2014

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளின் மயூரவாகன சேவன விழாச்சிறப்பு

                                                        ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளின் 
                                    மயூரவாகன சேவன விழாச்சிறப்பு

                       பாம்பனார் - வாரியார் அடிப்பொடி செ.வே. சதாநந்தன்
                                         தலைவர், சைவ சித்தாந்தப் பெருமன்றம் ( 1905 )
                                                            தலைவர், மஹாதேஜோ மண்டல சபை   ( 1926 )

 பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் ( 1850 - 1929 ) அத்தியாச்சிரம சுத்தாத்வைத,வைதீக, சைவசித்தாந்த ஞானபானுவாய் விளங்கிய அருளாளர். இழந்து போகாத வாழ்வை ஈயும்  முத்தையனார் எனப்  போற்றப்படும் முருகப்பெருமான் ஒருவனையே
முழு முதற்கடவுளாக வழிபட்டவர். மக்கள் துன்ப நீக்கமும், இன்ப ஆக்கமும் பெற வேண்டுமென்ற கருணை உள்ளத்தால் சாத்திரமாகவும், தோத்திரமாகவும் 6666 பாடல்களையும், 32 வியாசங்களையும் அருளியவர்.

  உலக மக்கள் அறியாமையிலிருந்தும், விலங்கு உணர்வுகளிலிருந்தும் விடுபட்டு பண்பட்ட அன்புள்ளத்தோடு அறவாழ்க்கையைக் கடைபிடித்து, சாந்த சீலர்களாய், ஒழுக்கமுள்ள உத்தமர்களாய், மனித நேயம் கொண்டவராய் வாழவும்,     நாட்டில் ஒற்றுமையுணர்வு  மேலோங்கி அமைதி நிலவவும் அறிவுரை வழங்கி, நல்வழி வகுத்து வாழ்ந்த அருளாளர். சுவாமிகளின் சீடரான தமிழ் தென்றல் திரு.வி.க அவர்கள் தம் குருவணக்கத்தில் பாம்பன் சுவாமிகளைத் " தமிழ்ப் பொழிலே, அன்பு
கொழி திரையே, தெய்வத் திறங்கண்ட அறநிலையே, செகத்திலுற்ற கூம்பலற எழுகதிரே, நீதி ஓம்புக வென்றுரைத் தொழுகி உலகில் வாழ்ந்த உயர் குமரகுருதாச ஒளியே போற்றி " என்று புகழ்ந்துள்ளார்கள். " ஐம்முகச் சிவநெறியும், அறுமுகக் குக நெறியும் ஒன்றேயெனவும், தமிழாலும், வடமொழியாலும் அனைத்துக் கடவுட் கொள்கைகளையும் ஐயந்திரிபற உணர வேண்டும் என்ற அடிப்படையில் இரண்டும் ஒரு நெறி நோக்கியெனவே யெனவும்; இல்லறமும்,துறவறமும் முரண் பட்டனவல்ல, ஒன்றன்பின் ஒன்றாக இணைந்து வரும் ஒருமை நிலையினவே என்றும், இவ்வாறு இங்கே கூறப்பெற்ற மூவகை இருமைகளையும், இணைக்கும் திருவருட் பாலமாக
நின்று உலக மக்களுக்கு வாழ்ந்து காட்டிய அருளாளரே பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் ஆவர் " என்றார்  சித்தாந்த சரபம், பேராசிரியர் முனைவர் வை. இரத்தினசபாபதி அவர்கள்.

   சுவாமிகள் இசைத் தமிழிலும், இயல் தமிழிலும் சிறந்து விளங்கியவர். இவர் ' வடமொழிக் கடலையும், தென்மொழிக் கடலையும் ஒருங்கே உண்ட காளமேகன் ' என்றார் திரு.வி.க. பல தெய்வ வழிபாட்டினைக் கண்டித்து ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற கருத்து 
உடையவர்.ஆன்ம நெறிக்குத் தடையாய் இருப்பது சாதி அபிமானமே என்று உரைத்தவர். சாதி வேறுபாடுகளை அறவே வெறுத்தவர். பொய்யினில் முனிவு கொண்டவர்.சீவகாருண்யத்தைப் பெரிதும் போற்றியவர். ஒருமூட்டைப் பூச்சி சிறுவனால் கொல்லப் பட்டதைக் கண்டு அவனைக் கண்டித்து மனம் வருந்தி அன்று பூராகவும் உணவு 
உட்கொள்ளாமல் இருந்தார். இறைவன் படைப்புகள் அனைத்தும் முக்கியமானவைகள் என்றும், உடல் உருவத்தில் வேறுபட்டாலும் உயிர் அடிப்படையில் சமம் என்று கருதியவர். மிகுந்த தமிழ்மொழிப் பற்றுக் கொண்டவர். வடமொழியே கலவாத தூய தமிழில் " சேந்தன்
செந்தமிழ் " என்ற நூலை இயற்றியவர். " சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ்
முழக்கம் செழிக்கச் செய்வீர் " என்று அறிவித்தவர். ' சேந்தன் செந்தமிழ் ' என்ற நூலுக்கு பேராசிரியர், டாக்டர்.மு.வரதராசனார் அவர்கள் வரைந்த முகவுரையில் கூறியதாவது "நூண்மாண் நுழைபுலக் கருத்துக்கள் பல அமைந்த நூலும், உரையும் உள்ள அமைப்பு இது வரையில் தமிழ்மொழி வரலாற்றில் இல்லையெனலாம். தமிழ் என்ற சொல்லே தமிளம், திரமிடம், திராவிடம் எனத் திரிந்து வடமொழியில் புகுந்து வழங்கியது".

   "இரை தேடுவதோடு  இறையைத் தேடு" என்று சுவாமிகள் அறிவுறுத்தினார்கள். முருகன் ஒருவனே முழுமுதற் கடவுள் என்று உள்ளம் உருகி அருளிய பாடல்கள் 6666 வியாசங்கள் 32. இவைகள் வேதம், உபநிடதம், ஆகமம், சைவசமய சாத்திரம், தோத்திரம் முதலியவைகளின்
நுட்பங்களைக் கொண்டன. சித்திரம், மதுரம், வித்தாரம், ஆசு எனும் நால்வகைக் கவிகளை யாத்தார்கள். ஒரு பாடலை 125 பாடலாக மாற்றி இரண்டரைக் கடிகைக்குள் " பஞ்சவிம் சதி அதிக சதிபங்கியை " அருளினார்கள். இவருடைய பாடல்கள் 20க்கும் மேற்பட்ட பண்களில் 
அமைந்துள்ளன. இவைகள் மந்திரசக்தி வாய்ந்தவை. ஐந்திலக்கண அமைதியிற் பொலிவும், காவியச் சுவையும் மிக்கவைகள். இவைகளை உள்ளத் தூய்மையுடன் ஓதி உடற்பிணியில் இருந்தும், துன்பங்களிலிருந்தும் விடுபடுவர் பலர். பக்தர்கள் வழிபாட்டில் ஓதி பயன் பெறும் பதிகங்களில் சில கீழே குறிக்கப்பட்டுள்ளன.

        பதிகம்                                                                  பயன்

குமாரஸ்தவம்                              கந்தபுராண சுருக்கம் 44 மந்திரங்களால்
                                                              முருகப் பெருமானை அர்ச்சித்து
                                                              அவனுடைய திருவடியை அடைய வழி
                                                              வகுக்குவது.

சண்முககவசம்                             பகை, பயங்கரம், பாவம், வறுமை, நோய்
                                                               முதலியவற்றிலிருந்து நிவாரணம் பெறச்
                                                               செய்வது. " நீ பாராயணம் செய்கின்ற மகா
                                                                மகிமையுடைய சண்முக கவசம் ஒன்று 
                                                                மட்டுமே நின்னைக் காத்து கதியிற் அக்
                                                                சேர்க்குமே "             - பாம்பன் சுவாமிகள்

பகைகடிதல்                                     பகை வெல்லவும், திருமயிலின் மீது 
                                                                  முருகனைத் தரிசிக்கவும் உதவுவது.

அட்டாட்ட விக்கிரக லீலை       உரோக நாசம், பாவ நாசம், சத்துரு
                                                                  நாசம், ஆயுள் விருத்தி, தைரிய விருத்தி
                                                                  வீரிய விருத்தி,  புத்திர விருத்தி, புண்ணிய 
                                                                  விருத்தி உண்டாவதலோடு சர்வார்த்த
                                                                  சித்தியும் முத்தியும் வாய்க்கும் என்பது
                                                                  வாய்மை.

வேற்குழவி வேட்கை                     புத்திர தோஷ நிவர்த்தி, 
                                                                    சந்ததி விருத்தி
                                                                    அடையச் செய்வது.

திருக்கயிலாய திருவிளையாடல்            சிறுவர்கள் உடல் வன்மை, கல்வி
                                                                                      அறிவு பெறுதல்.

பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம்           ஆயுள் வளர்த்தல், மோட்சம், சுகம் 
                                                                                 பெறுதல். 

துக்கரகித பிரார்த்தனை                           பல்வேறு துக்கங்களிலிருந்து 
                                                                                விடுதலை அடைதல்.

சரவணப்பொய்கை திருவிளையாடல்              குழந்தைகளின் பாலாரிஷ்ட                                                                                                   தோஷங்கள்  நீங்கும்.

திருநெல்வேலிக் கோவில் பதிகம்              தாழ்வுற்ற  குடும்பங்கள் மீண்டும்
                                                                                          மேல்நிலை அடைய உதவுவது.

   சுவாமிகள் கீழ்க்கண்ட சாத்திர நூல்களைச் சைவ சித்தாந்த அடிப்படையில் அருளியுள்ளார்கள். ( அ) பரிபூரணானந்த போதம் ( ஆ ) தகராலய ரகசியம் ( இ ) திருப்பா( ஈ ) செக்கர்வேள் செம்மாப்பு செக்கர்வேள் இறுமாப்பு. தாம் அருளிய சாத்திர நூல்கள் பலவற்றிக்குத் தாமே உரை அருளியுள்ளார்கள். " மெய்கண்ட சாத்திர நூல்களில் ஏற்படும் ஐயங்களுக்கு சுவாமிகளின் சாத்திரநூல்களில்  விளக்கம் காணலாம் " என்று சித்தாந்த சரபம் மகாவித்துவான் முனைவர் பேராசிரியர் மயிலம் வே. சிவசுப்ரமணியன் அவர்கள் கூறுகிறார்கள்.        பாம்பன் சுவாமிகளின் பாடல்கள் முருகப் பெருமானால் அங்கீகரிக்கப் பட்டவைகள். ஓர் எடுத்துக்காட்டு, ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய
பஞ்சாமிர்த வண்ணப் பாடலை இரண்டு வேதியர்கள்  திருச்செந்தூர் கவுண்ட மண்டபத்தில் நாள்தோறும் பாராயணம் செய்யும் போது ஒரு நாள் அழகான ஓர் இளைஞன்  இப்பாராயணத்தைக கேட்டு மகிழ்ந்ததை அங்குள்ள மூதாட்டியிடம் சொன்னதாகப் பாம்பன் சுவாமிகள்  ' பெருவேண்டுகோள் ' என்னும் பதிகத்தில் குறிப்பிட்டு உள்ளார்கள்.

" பரிவாளர்கள் அங்கு ஓது ஒரு பஞ்சாமிர்த வண்ணம்
 இரியா எனது உளம் நச்சு இனிதாம் என்றொரு கிழமைப்
 பெரியாள் முனம் வந்து ஓதிய செந்தில் பெருமானே
 வரிமாமறை இறைவா! எனை மறவேல் எனை மறவேல் ".

" நான் பாடுபாட்டை நவில்பவர்க்கு நலம் நல்காய் " என்றும்,  " எனைத் தள்ளினாலும் எனை நம்பினவர்த் தள்ளேல் " என்றும் பாம்பன் சுவாமிகள் முருகப் பெருமானைத் துதித்து, உலகவர்க்காகவே வேண்டும் அருள்நிலை பரமாசாரியராகவும், சமுதாய மேம்பாட்டு சிற்பியாகவும் திகழ்ந்தவர்.

நிஷ்டையும், முருகப் பெருமான் தரிசனமும்

   முருகப் பெருமானைக் கனவிலும், நினைவிலும் பலமுறை தரிசித்தவர். 1894-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இராமநாதபுரத்தை அடுத்த பிரப்பன்வலசை என்ற சிற்றூரில் உள்ள மயானத்தில் ஆறு அடிச் சதுரக்குழியில் 35 நாட்கள் ஊண், உறக்கமின்றி தொடர்ந்து நிட்டை செய்து முருகப் பெருமானை நேரில் தரிசித்து அவரிடம் உபதேசம் பெற்றார். பாம்பன் சுவாமிகள் இந்த தெய்வீக அனுபவத்தை ' தகராலய ரகசியம் ' 
( 1896 வருடம் ) என்ற தம்முடைய நூலில் விவரித்துள்ளார்கள். " 35 நாள்காறுந் தனி நிட்டை காத்திருந்த ஞான்று கௌபீன தாரியாய் வெளிப்பட்ட இறைவன் எமக்கொரு மொழியினுணர்த்தியருளினன் "  என்று இந்நூல் பாயிரத்தில் சுவாமிகள் கூறியுள்ளார்கள்.

" எத்தனையோ தலம் சுற்றி வந்தேன் மனம் எட்டுணையும்
 அத்தன் குமாரன் முருகனை நாட அடங்கவில்லை
 பத்தர்கள் வாழ் பிரப்பன் வலசைச் செம்பதிதனிலே
 சத்தியமாகக் கைகூடினதால் இனி தாழ்வில்லையே "
                                                              - பாம்பன் சுவாமிகள்

மயூரவாகன சேவனம்:

     அவர்களின் தூய பக்தியையும், அவர்கள் இயற்றிய சண்முககவசத்தின் மகிமையையும், முருகப்பெருமான் தம் மெய்யடியார்களுக்கு அருளும் கருணையையும் மக்கள் அறியும் வண்ணம் சென்னையில்    முருகப்பெருமான்    ஒரு     திருவிளையாடல்       புரிந்தார்.
உருத்ரோத்காரி ஆண்டு மார்கழித் திங்கள் 12 ஆம் நாள் வியாழக்கிழமையன்று ( 27-12-1923 )வடசென்னை, தம்புச்செட்டித் தெருவில் வேகமாக வந்த குதிரை வண்டி சுவாமிகளின் மீது மோதியதால் அவர்களின்    இடைக்கால்  எலும்பு   முறிந்து விட்டது.    ( Compound Fracture ) 
இரத்தப் பெருக்கோடியது. சுவாமிகள் கலங்கவில்லை. மருத்துவம் செய்து குணப்படுத்தி வாழ நினைக்கவில்லை. இத்துடன் உடற்பற்றும், உயிர்ப்பற்றும், உலகப்பற்றும் ஒருங்கே ஒழிந்து விட்டன என்றும், மீண்டும் பிறவித்துன்பம் வாராது என்றும் எண்ணி முருகப்பெருமான் திருவடி மலர்களையே சிந்தித்து மகிழ்ந்தார்கள்.

                கால் முறிந்தது மூப்பு அஞர்நிலையில்; என்கதிகொள்
                நீல் முறிந்தது; விடற்கு உள்ளேநிகழ் அதனால்
                நான் முறிந்தது; நவைநிலன் முறிந்தது; நடலைச் 
                சூழ்முறிந்தது எனா உவந்தனன்.
                                                - அசோக சாலவாசம் நூல் பாடல் 4.6

பொருள்: முதுமைத் துன்பம் எய்திய நிலையில் கால் முறிந்தது; நடை கொள்கின்ற பிராணவாயு நடத்தலும் முறிந்தது; விட்டு நீங்குவதற்கு மனமானது நினைப்பதனால் யான் என்ற அகப்பற்றும் முறிந்தது; குற்றத்திற்கிடமாகிய உலக வாழ்வும் முறிந்தது; துன்பமான கருப்பமும் ( பிறப்பும் ) முறிந்தது என எண்ணி மகிழ்ந்தார்.

   இந்த விபத்தைக் கண்ணுற்ற சுவாமிகளின் அன்பர்  சுவாமிகளைச் சென்னை அரசு பொது மருத்துவமனையில்   ( Government General Hospital )    11 ஆம்    எண்ணுள்ள   மன்றோ   வார்டில் சேர்த்தார். சுவாமிகள் 73 வயது மேற்பட்டவர் என்பதாலும், உப்பு அற்ற உணவையே உண்பவர்
என்பதாலும் அவர்களின் முறிந்த எலும்பு ஒன்று சேராது என்றும், அறுவைச் சிகிச்சையைச் செய்ய வேண்டுமென்றும் ஆங்கிலேய மருத்துவர்கள் கருத்துத் தெரிவித்தார்கள்.

    அக்கருத்தை ஏற்காமல் சுவாமிகள்   முருகப்   பெருமானையே    சிந்தித்த   வண்ணமாய்  இருந்தார்கள். சுவாமிகளின்   சீடர்கள்   1891 ஆம்    ஆண்டில்     இயற்றிய  சண்முக கவசத்தை தினமும் பாராயணம் செய்தார்கள்.             அவர்களுள்      முதன்மையானவரான       சென்னை 
திருவல்லிக்கேணி சின்னசாமி சோதிடர் அவர்கள் சுவாமிகளின் கால்     இரண்டாக முறிவுப் படாதிருக்க இரண்டு வேல்கள்    மேலே      பொருந்தியும்,      மற்றொரு வேல் கீழே தாங்கிஇருப்பதையும் காட்சியாகத் தினமும் கண்டு   சுவாமிகளின்    முறிந்த காலின் எலும்பு கூடும்  வரையிலும் கண்டு இன்பமடைந்தார்.

                               ' என்பு கூடு காறும் அவ்வாறு எதிர்
                                அன்பன் நோக்கி இறைஞ்சி அகத்துளே
                                இன்பு கூர்ந்தனனே தொழில் சோதிடம்
                                என்பது ஆயினும் ஈசனை எண்ணுவோன் '
                                                                      - அசோக சாலவாசம் - பாடல் 5-6

  அரசு  பொது மருத்துவமனையில்    சுவாமிகளுக்கு      மருத்துவம்    செய்யத்  தொடங்கினர். மருத்துவமனையில் சேர்ந்த 11 ஆம் நாள் இரவில் முருகப் பெருமானின் பெரிய மயில் ஒன்று தனது தோகையை நல்ல வட்ட வடிவமாக   விரித்து,    அழகிய வானை மறைத்தும்,   அதன் 
இடப்பக்கத்தில் உடன் வந்த மற்றொரு மயிலும் சேர்ந்து  நடனமாடிய  அழகிய   காட்சியைச்  சுவாமிகளுக்கு முருகப்பெருமான் காட்டியருளினான்.         மயில்களின் கால்கள் தரையில் பதியவில்லை. அவைகள் பொன்மய பச்சை நிறமாக இருந்தன.

                                விண் மகிழ்ந்திட; வேல்விடு வேள்மயில்
                                கண்மகிழ்ந்து எழல் தாசற்குக் காட்டினான்;
                                மண் மகிழ்ந்திட, மாகம் மகிழ்ந்திட
                                எண்மகிழ்ந்த பன்னொன்றின் இராவிலே
                                                              அசோக சாலவாசம் - பாடல் -5-7

                                 அந்த மாபெரும் காட்சியில் ஆடியே
                                 வந்த மாமயில் கூந்தல் நல்வட்டமாய்
                                 சந்த வானை மறைத்தலும், சாரிடம்
                                 வந்த தோகை நடிப்பும் வழங்கின.
                                                              அசோக சாலவாசம் - பாடல் - 5-8

                                 வலத்து மாமயிலோடு இடம் வந்த ஓர்
                                 நலத்து மஞ்ஞை சின்மைத்து அவை ஞாலமாம்
                                 நிலத்திலே அடிவைத்தில நீள்உருப்
                                 பலத்த பொன்மை மலிந்த ஓர் பச்சையாம்
                                                              அசோக சாலவாசம் - பாடல் - 5-9

                                 மிளிர் வயித்திய நாத சாலையின் மேற்புறம்
                                 ஒளிர் நடத்தில் இவ்வாறு கண்டுஓகையால்
                                 குளிர் உளத்தினனாய்க் கைகுவித்தனன்
                                 தெளிதிருப்புகழோன் நடைச்சீருளோன்
                                                               அசோக சாலவாசம் - பாடல் - 5-10

    அம்மயூரவாகனக் காட்சியானது தன்னை விட்டு மறைதலைக் கண்டு, மீண்டும் இது போன்ற தொரு காட்சி எவ்வாறு கிடைக்கும் எனத் திருவருளைச் சிந்தித்து சுவாமிகள் அழுதார். அவர் மனம் மகிழுமாறு ஓர் இரவில் செவ்வேட் பரமன் ஒரு சிவந்த நிறக் குழந்தைவடிவில் தோன்றி சுவாமிகள் படுத்திருந்த படுக்கையில் தலை வைத்துக் காலை நீட்டிப் படுத்திருந்தான்.         அத்திருக்காட்சியைக் கண்ட சுவாமிகள் குழந்தையாக வந்தவன் முருகப் பெருமானே எனும் நுட்பத்தை அறிந்த பின்பு அவன் மறைந்து விட்டான். தன்னை விட்டு நீங்கவில்லை என்று, குழந்தை வடிவாய் காட்சியளித்தால் தன் உள்ளம் களிப்பு கொண்டுளதாயினும்,     இவ்வுலகில் இறப்பேன்  என்று  உறுதி  கொண்டு களித்துள்ளதன்னை இம்மண்ணுலகில் இருக்கும்படி  செய்துள்ள  பாங்கைத்  தான்  அறிந்திலேன்  என்று  உலகவாழ்வை எண்ணாத சுவாமிகள் முருகப் பெருமான் திருப்பெயரைப் பலமுறை ஓதினார். உயிரையும், உடம்பையும் சண்முகனே கவசமாக இருந்து காப்பான் என்ற உறுதியுடன் சண்முகக் கவசம் பாடி அருளிய சுவாமிகளின் காலே முறிந்து விட்டது என்று எண்ணி உலகம் வேலிறைவனை இழிவாகப்
பேசுமோ என்றும், அவ்வாறு பேசாமல் இருப்பதற்கு என்ன தடையைக் கருதுவேன் என்றும் பெரிதும் கவலைப்பட்டார். பிறகு அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் எக்ஸ்ரே படங்கள் எடுத்து
ஆராய்ந்து எலும்பின் ஒடிந்த பகுதி கூடி வருவதைக் கண்டு மகிழ்ந்தனர்.        இன்னும்  பதினைந்து நாட்களுக்குள் புண் ஆறிவிடும்,        அதுவரையிலும் மருத்துவமனையை விட்டுச் செல்லக் கூடாது 
என்ற நாதம் முருகப் பெருமானிடத்திலிருந்து சுவாமிகள் மகிழும்படி தோன்றியது.

  அம்மருத்துவமனையில் வேலை பார்த்து வரும்  உயர்  அதிகாரியான  ஓர்  ஆங்கிலேய  பெண்மணி சுவாமிகளிடம் சென்று  எந்த மனிதரும் உண்ணும் உப்பை நீத்த தங்களின் கால் குணமாகியது பெரும் 
வியப்பாக  உள்ளது  என்று  அன்புடன்  கூறினாள்.       சுவாமிகள்  தன்  துன்பம்  நீங்க  மருத்துவம் செய்தவர்களும், உதவி   புரிந்தவர்களும்  சிறப்புடன்  வாழ்வாராக  எனக்கூறி  முருகப் பெருமான் 
திருவருளை வேண்டினார். வானம் இடிந்து தலையில் விழும்படி வம்பு வந்தாலும் அந்தக் கானமயில் முருகையன் திருவருள் கைவிட மாட்டாதே என்று தாம் அருளிய போதனையில் உறுதியாக இருந்தார்.
பிறகு மருத்துவமனையை விட்டு தம் சீடர்கள் இல்லத்தில் தங்கினார்.         சுவாமிகளின் முறிந்த கால் குணமானது கண்டு அன்பர்கள் மகிழ்ச்சி கொண்டனர்.                 முன்பு காலனை ( இயமனை ) உதைத்த
சிவபெருமானின் மகனாக நிலை பெற்றாய் என்றும், அவனது காலை  அடைக்கலம்  அடைந்தவரை நன்கு காத்தருளினாய் என்றும், தனது முறிந்த  காலை  நன்கு  குணம்  பெறச்செய்தாய்  என்றும்  கூறி 
இனி  எக்காலத்திலும்  அவனுடைய  காலைத்  தனக்கு  அளித்தருள்வாயாக  என்றும்  சுவாமிகள் வேண்டினார்.

                           முன்காலை உதைத்தவன் கால் முளையாய் நின்றாய் 
                           பின்காலை அடுத்தவரைப் பெரிதும் காத்தாய்
                           என் காலை இனிது அளித்தாய் ; இனி எஞ்ஞான்றும்
                           நின் காலை எனக்கு அளி என்றான் அந்நீத்தோன்
                                                                                         அசோக சாலவாசம் - பாடல் -7-4

   இந்த  அற்புத தெய்வீக நிகழ்ச்சி மேற்கண்ட மருத்துவமனை 11 ஆம் வார்டில் 26-12-1981ல் டாக்டர்.இரத்தினவேல் சுப்பிரமணியம் M.D.,F.R.C.P   அவர்களால்  திறக்கப்பட்ட  கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. அக்குறிப்பின் வாசகங்கள் வருமாறு:--

         " பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் கால் முறிவுண்டு சென்னை பொது மருத்துவமனையில் 11 வது வார்டு ( மன்றோ வார்டு ) 11 வது படுக்கையில் 27-12-1923 அன்று சேர்க்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.            முருகப்பெருமான்
திருவருளால் 11ம் நாள் இரவு  ( 06-01-1924 ) வளர்பிறைப் பிரதமை திதியும்,       பூராட நட்சத்திரம் சேர்ந்த நன்நேரத்தில் சுவாமிகள் சுவாமிகள் மயில் வாகனக் காட்சி கண்டு, அறுவை சிகிச்சை இல்லாமலே பூரண குணம் பெற்றார். அந்நாள் மயூர வாகன சேவன விழாவாக ஒவ்வோர்
ஆண்டும் சுவாமிகள் காலம் தொடங்கி விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

         மஹாதேஜோ மண்டலம் பொன்விழா பொலிந்த 58 வது ஆண்டு மயூர வாகன சேவன விழாவின் நினைவாக 26-12-1981 அன்று இப்பதிவுக்கல் திறக்கப்படுகிறது. 

திறப்பாளர்: டாக்டர்.இரத்தினவேல் சுப்பிரமணியம் M.D.,F.R.C.P   அவர்கள்.

முன்னிலை: ஸ்ரீலஸ்ரீ கணபதி சுவாமிகள், இராமநாதபுரம்

அருட்பணி: ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருள்

                                        டாக்டர்.சிவராஜன், M.D.,
                                     
                                       டாக்டர்.T.V. ஷண்முகம், M.S.,

                                       டாக்டர்.அருணகிரி,B.Sc.,M.S.,

                                       டாக்டர். நடனசபாபதி, M.S.,

       இப்பதிவுக்கல் அம்மருத்துவமனையில் 11 ஆம் வார்டில் பாம்பன் சுவாமிகள் திருவுருவப் படம் அருகில் உள்ளதை இன்றும் காணலாம். இவ்விழாவைத் தொடர்ந்து கொண்டாடுவது மஹாதேஜோ மண்டல சபையினரின் ( சுவாமிகளால் 1926ல் நிறுவப்பட்டது ) கடமை எனத் தாம்
ஏற்படுத்தி பதிவு  செய்யப்பட்ட  வில்சாசனத்திலும் ( 17-07-1926 ) வில்  அனுபந்த   சாசனத்திலும்( CODICIL ) 19-12-1927 விளக்கமாகக் கூறியுள்ளார்கள். " என்னால் ஆரம்பிக்கப்பட்டு பல வருடங்களாக நடத்தப்பட்டு வருகிற மயூரவாகன சேவனம் என்னும் விழா அல்லது பூஜையை வருஷந்தோறும் தமிழ் மார்கழி மாசத்து வளர்பிறை முதல் நாள் அதாவது பூர்வ பக்ஷப்பிரதமை திதியிலும், அடுத்த தினத்திலும் இதுவரை எப்படி நடத்தினேனோ   அப்படியே மிகு சிறப்பாகவும்,
ஊக்கமாகவும் நடத்த வேண்டும். என்னால் ஏற்படுத்தப்பட்ட மேலே கண்ட நியமனமும் பூஜையும் சூரிய, சந்திரர் இருக்கும் வரையிலும் வருஷந்தோறும்  நடைபெற  வேண்டும்  என்பது  எனது விருப்பம். மேற்கண்ட விஷயத்தில் கோர்ட்டாரும், அதிகாரிகளும் எல்லாவித உதவியையும் செய்து என்னுடைய விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் ".

   " இந்தத் திருவிழாவில் விமானத்தின் மீது விக்கிரகம் இருத்தி வெளியே செல்லுதலில்லை. படந்தூக்கிச் செல்லுதலுமில்லை.      இரண்டு  கோழிக்  கொடிகளுக்கும்,  வேல்களுக்கும், வச்சிராயுதத்துக்கும் பூமாலைகள் சார்த்தப்பட்டு சந்தன தூபதீப உபசாரங்களோடும், நன்றாக
அலங்கரிக்கப்பட்ட வீதியில் அடியவர் கூட்டத்தோடு அவை பவனி வந்து இருப்பிடம் அடையத் தக்கன. ஏற்பட்டுள்ள குடை, ஆல வட்டம்  முதலியன  கூடச்  செல்ல  வேண்டும்.  ஏற்பட்டுள்ள குமாரஸ்தவமும், அருணகிரிநாத சுவாமிகள் திருப்புகழும் என்னுடைய பாடல்களுமே வீதியில்
பாடத்தக்கன. தாசிகள் நடனமும், அதற்குரிய மேளதாளங்களும் உபயோகித்தல் ஆகாது. தீவட்டிகளும் மத்தாப்புகளும், வாணங்களும் குறைவின்றி நிகழத்தக்கன. 20 தீவட்டிகளுக்குக்
குறையக்  கூடாதென்பது   எனது  அபிப்பிராயமாகும்.   ஆள்  தூக்கிச்  செல்லும்  வாஷீஙடன்  லைட்டுகள் சுடுகாடு சென்று, வருவனவாகவே சென்னையிற் காணப்படுதலால் அவற்றுள் ஒன்றும் உபயோகித்தல் கூடாது. இருப்பிடத்திலே மயூரவாகன பரமன் படத்தைப் பூமாலைகள்
அலங்கரித்து விடியும் வரையிலும் சண்முக சகச்சிர நாமார்ச்சனை செய்தலோடு ஸ்ரீமத் குமார சுவாமியத்திலுள்ள அசோக சாலவாசமும் படித்தல் வேண்டும்.

    "அருட் பெருங்கடலின் மகிமைகளைக் குறிப்பாக எடுத்துச் சொல்லும் இது படியாமல் இந்தத் திருவிழா நடைபெறுவதில்லை.       ஆதலின் படித்தல்  அவசியமாம்.  அடுத்த  தினம்  ஆண்டவன் அடியார்களுக்கும், ஏழைகளுக்கும்  நல்ல  அன்ன  ஆகாரமும்,  பால்  கலந்த  மதுர  பானமும் 
குறைவில்லாமல்  கொடுத்து  உபசரித்தல்  வேண்டும்.  பண  வருவாய்  அதிகமேற்பட்டால் சொல்லியுள்ள பரம காரியங்கள் ஏற்புடைமையில் பல தினங்கள் செய்தலும் ஏற்புடையதே"
"திருவிழாக்  காலத்திற்  சபையார்  அன்பர்  அனைவருமிருந்து   அவ்விழாவைச் சிறப்பித்தல் கடமையாம். பகவானை முன்னிட்டு பகவானைப் பூஜிக்கும் ஞான பூஜையை அனுசரித்து நடப்பனவே இக்காரியங்கள் என யாவரும் எண்ண வேண்டும். எண்ணி இத்திருவிழாவைப் பெரிதும் அபிமானித்து நடந்து நாளை ஒப்புக்கொடுப்பர் என்னையும் என்னை ஆட்கொண்டு அருளிய குமார பகவானையும் நன்றாக நம்பினார் ஆகிறார். ஆதலின் அவர்களுக்கு எல்லா நன்மையும் உண்டாகும்படி இறைவனருளைச் சிந்திப்பவன் ஆயினேன்" 
- இங்ஙனம் குமரகுருதாச சுவாமிகள். 

சுவாமிகள் திருவான்மியூரில் சமாதியாதல்

  சுக்கில ஆண்டு ( கி.பி. 1929 ) வைகாசி 2 ஆம் நாள் புதன்கிழமை பகல் 11 மணிக்கு தம்முடைய சீடர் சின்னசாமி பிள்ளையை அழைத்து இறைவன் திருவுளக்குறிப்பு ஒருவாறாகக் காணப்படுகிறது. திருவான்மியூரில்  ஒரு  நிலம் பார்,    அது  விரைவில்  ஆக வேண்டும்.   இத்திருநீற்றினை அணிந்து கொண்டு அக்காரியத்திற்குச் செல் என்று  கூறி  நீற்றினைக்  கொடுத்தனுப்பினார்கள்.  அஞ்ஞான்று, சென்னை, இராயப்பேட்டை, புதுப்பாக்கத்திற்கு வரும்படி சுவாமிகளை அவுடைய சீடர் ஞான சாகர 
முதலியார்   அழைத்தார்கள்.   அவரைப்பார்த்து,   சுவாமிகள்,    நான்    அங்கு     வரமாட்டேன். திருவான்மியூருக்குப் போகிறேன். நீ அங்கு வா என்றார்கள்.
     ( இதையே  அடியார்கள்   அனைவரும்  தங்களுக்கு  சுவாமிகள்  விடுத்த  அழைப்பாகக்  கருதி அவருடைய சமாதி நிலையத்திற்கு  அவ்வப்போது சென்று அவருடைய அருளைப் பெறுவது சாலப் பொருத்தமாகும் )

   பின்னர், சுக்கில வருடம் வைகாசி மாதம் 15 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை ( 29.05.1929 ) இரவு வெகுநேரம் விழித்திருந்த சுவாமிகள் இரவு 2 மணிக்குத் தமக்கு அருகிலிருந்த சீடர்கள் இராஜ
பாதர் முதலியாரையும், மதுரை முதலியாரையும் நோக்கி, " மயூர வாகன சேவன விழாவை விடாது நிகழ்த்தி வாருங்கள்; என்னுடைய உடலைத் திருவான்மியூரில் சேர்த்து விடுங்கள்.என்றார்கள்.
மறுநாள் ( 30.05.1929 ) காலை 7-15 மணிக்குச் சுவாமிகள் யாவரும் அறியவே சுவாசத்தை உள்ளுக்கு இழுத்தார்கள். அது வெளிவராமல் உந்தியிலேயே எழும்பி அடங்குவதாயிற்று. அது நிகழ்ந்தது சுக்கில வருடம்  வைகாசி  மாதம்  அமர  பட்ச  சஷ்டி  திதியும்,  அவிட்ட  நட்சத்திரமும்  கூடிய 
சுபவேளையாகும்.

   மறுநாள் ( 31.05.1929 ) அடியார்கள் திருப்புகழ் ஓதியும், விருதுகளைத் தாங்கியும் புடை சூழ, தீவட்டி, மத்தாப்பு முதலியன ஒளி செய்ய, மிக அழகியதொரு புஷ்ப விமானத்தில் சுவாமிகள் எழுந்தருளி காலை 8-15 மணிக்கு சென்னை, திருவான்மியூர் சேர்ந்து சமாதி நிலையத்தில் அமர்ந்து அருள்பாலித்து வருகிறார்கள். அச்சமாதி நிலையத்தில் சுவாமிகளால் நிறுவப்பட்ட மஹாதேஜோ மண்டல சபையினர்  தொடர்ந்து வழிபாடு செய்து வருகின்றார்கள்.

               ------------------------------------------------------------------------------------------------------------------

                            நன்றி: 
                                 மஹாதேஜோ மண்டல சபையின் அனுமதியுடன்
                                   வெளியிடப்பட்ட  நூலிலிருந்து
            --------------------------------------------------------------------------------------------------------------------