Monday, April 28, 2008

Shanmuga kavasam by sreemath pamban swamigal

                                    Shanmuga Kavasam 
                                                      by Sreemath Pamban Swamigal

.

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம் SHANMUGA KAVACHAM

                              ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம் 
                                                        SHANMUGA KAVACHAM
                     ஷண்முக கவசம் ஈடு இணையற்ற மந்திரக் கவசமாகும்.

ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் சரிதம் SREEMATH PAMBAN SWAMI'S HISTORY


                           ஸ்ரீமத்   பாம்பன் குமரகுருதாச  சுவாமிகள் சரிதம் 
                                             SREEMATH PAMBAN SWAMI'S HISTORY
அகிலத்தை ஆள நினைக்கும் மனிதனுக்கு தனது மனதை ஆளத் தெரியவில்லை. அந்த மனதையும் அதில் பொதிந்து கிடக்கும் இரகசியங்களும் அறிய, அகத்தை ஆய்வு செய்து உய்வதற்கு மனிதனை கரை சேர்ப்பதற்கென்றே பிறக்கின்ற அவதார புருஷர்களின் வரவால் மட்டுமே ஆன்மீக பாதை எளிதாகிறது. காலத்தின் தேவையை கருத்தில் கொண்டு அவர்கள் மக்களுக்கு சுலபமான பாதையை காட்டுகின்றார்கள்.

அத்தகைய சான்றோர்கள் எப்போதாவது ஒருமுறை அவதரிக்கிறார்கள். அவர்கள் இந்த உலகினின்று மறைந்தாலும், அவர்களின் பெருவாழ்வும் மேலான உபதேசங்களும் என்றும் மறைவதில்லை. அவ்வாறு ஒரு ஆன்மீக பேரலையை நமக்கு சமீபகாலத்தில் எழுப்பி, மனிதகுலத்தின் ஆன்மீக பயணத்திற்கு வழிவகுத்தவர் திருமுருக பெருமானின் குகப்பிரம்ம நெறிக்கும், நம் தெய்வ மொழியாகிய தமிழ் மொழிக்கும் தமது கவி திறத்தால் பேரொளி கூட்டியவர். தமது பாடல்களிலும், சாத்திரங்களிலும் சுப்பிரமணியத் தத்துவத்தையும், அதன் மேன்மையையும் தெளிவுற விளக்கியவர். அத்தியாச்சிரம சுத்தாத்வைத வைதிக சைவசித்தாந்த ஞானபானு பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் ஆவார்கள். 6666 பாக்களால் பன்னிருகைப் பரமனை மட்டுமே பாடிப் பரவியவர். தனக்கென வாழாமல் பிறருக்காக வாழ்ந்த சீலர். 

கங்காதரன் பக்தனான இராவணனைச் சம்மரித்த தோஷம் நீங்க, ஸ்ரீ ராமபிரான் சிவலிங்கம் ஸ்தாபித்து, பூஜை செய்து, புனிதமடைந்த ஸ்தலம் இராமேஸ்வரம். அதை சார்ந்த பாம்பன் எனும் பதியிலே, அகம்படியர் குலத்தவரான சிவத்திரு. சாத்தப்பப்பிள்ளையும், அவரது துணைவியார் செங்கமலத்தம்மாளும் தெய்வபக்தி மிகுந்த வளமான வாழ்வு வாழ்ந்து வந்தார்கள். இருப்பினும் புத்திர பாக்கியமில்லாத குறையோடு இருந்தார்கள். 

இக்குறை தீர்க்க அறுபடை வீட்டில் ஒன்றான திருச்செந்தூர் சென்று வேலவனை வேண்டி நின்றார்கள் அன்றிரவு சந்நிதியில் தங்கியிருந்த இருவரது கனவிலும் ஓர் பால சந்நியாசி தோன்றி, "யாம் விரும்பும் அன்பன் உங்களுக்கு சிரேஷ்ட புத்திரனாகப் பிறப்பான்" என்று சொல்லி மறைந்தார். 

மனநிம்மதியுடன் பாம்பன்பதி வந்டைந்தார்கள். அதுமுதல் செங்கமலத் தம்மாள் அவர்கள், கர்ப்பவதியாக இருந்து, ஒரு சுக்கிர வாரம் (பிறந்த வருடம் 1850 - 1852 க்குள்) சூரியோதயத்தில் அச் சந்நியாசியின் வாக்குப்படியே ஒரு தெய்வ புதல்வனைப் பெற்றெடுத்தார்கள். அப் புதல்வனுக்கு பாட்டனாரின் பெயரான 'அப்பாவு' (அப்பாவு = தந்தைக்கு இறைவன்) எனப் பெயரிடப்பட்டது. அப்பாவு என அழைக்கப்பட்ட சுவாமிகள் தம் ஐந்தாவது வயதில், சைவ பெரியவர் முனியாண்டியாபிள்ளை அவர்களிடம் தமிழ் பயின்று வந்தார்கள். தொடர்ந்து அவ்வூரிலுள்ள கிறிஸ்தவ கலாச்சாலையில் கல்வி பயின்று எல்லா பரீட்சைகளிலும் தேறி பல பரிசுகள் பெற்றுவந்தார்கள். 

நம் சுவாமிகள் தம் சிறுவயது முதல் சர்ச்சுகளையும், மசூதிகளையும், கோவில்களையும், கண்டால் மதபேதமின்றி வணங்கிச் செல்வார்கள். சுமார் பதினைந்தாவது வயதில் வழக்கம்போல் பள்ளிக்கூடம் செல்லும் போது ஒரு மசூதிக்கு அருகில் ஆகாச வெளியில் தங்கமயமான அரசம் இலைகள் பல வடக்கு நோக்கிச் செல்வதைக் கண்டார்கள். "என்ன ஆச்சரியம்" தேவர்கள் ரதம் ஆகாசத்தில் செல்லுமென்று சொல்லுவார்களே அதுதான் இப்படி தெரிகின்றதோ? எப்படியும் அவர்களை பார்க்க வேண்டுமென தீர்மானித்து அதுமுதல் தெய்வ சிந்தனையோடு இருந்து வந்தார்கள்.

நம் சுவாமிகள் இராமநாதபுரத்தைச் சார்ந்த நாகநாதர் கோவிலில் 'பிரம்மோற்சவத்தை' க்காண தம் நண்பர்களுடன் கடல்மார்க்கமாக ஒரு தோணியில் சென்றார்கள். தோணியின் சுங்கான் தட்டில் சுவாமிகள் அமர்ந்திருந்தார்கள். அதன் அடியில் அமர்ந்திருந்த சந்நியாசிகளில் ஒருவர் 'சிவ சிவ' என்று விடாது ஜெபித்துக்கொண்டு இருந்தார். இதை கண்ணுற்ற நமது சுவாமிகளும் அவ்வாறே ஜெபிக்கத் தொடங்கினார்கள். இடைவிடாது மூன்று நாட்கள் ஜெபித்துக்கொண்டு இருந்தார்கள். பின் சஷ்டி கவசம் என்னும் புத்தகத்தை வாங்கிப் படித்துக் கொண்டே பாம்பன்பதி வந்தடைந்தார்கள். சஷ்டிகவசத்தை கவசத்தில் கூறிய நியமப்படி தினமும் முப்பத்தாறு தடவை பாராயணம் செய்து வந்தார்கள். அதுமுதல் நாவைவிட்டு 'சிவ சிவ' மந்திரம் விலகியது. 

சுவாமிகள் பள்ளிக்கூடம் செல்வதை நிறுத்திவிட்டு சிலம்பம், மற்பிடி,நீர்நீத்து போன்ற கலைகளைப் பயின்று வல்லவாறாகவும், திரேக திடமுள்ளவராகவும் திகழ்ந்தார்கள். ஒரு சுக்கிர வாரத்தின் அதிகாலையில் தம் தென்னந்ததோப்பு களை பார்வையிடச் சென்ற நம் சுவாமிகள் கிழக்குத்திசையில் தம் தந்தையார் இருப்பதை அறிந்து வாயிற்படியிலேயே நின்றுவிட்டார்கள்.அப்போது தம் கையிலிருந்த கந்த சஷ்டி கவசத்தை எடுத்து அதன் ஆசிரியர் பெயர் தேவராயசுவாமிகள் எனக் கண்டார்கள். இதன் பிரதிபலிப்பாக சுவாமிகளுக்கு "இறைவனை பாடக் கடவேன்" என்று தம்முள்ளே துண்ணெனத் தோன்றிற்று. கீழ்த் திசையில் உதயமாகும் சூரியனை பார்த்த சுவாமிகள் "இது நல்ல வேளை" என எண்ணி ஒரு பனை ஓலையை எடுத்தார்கள். தனது எழுத்தாணியால் வகிர்ந்து கொண்டார்கள்
வடக்குமுகமாகத் திரும்பி முருகனை தியானித்து "குமாரபகவானே உன்னைப் பல பாக்களால் பாடக்கடவேன். அவர் வாக்குப்போல் எனக்கும் வாக்கு உண்டாகவேண்டும்" என்று மனதார நினைந்து கண்மூடி கைகூப்பி நின்றார்கள். அச் சமயம் தன்னையறியாமலேயே தமது வாக்கில் "கங்கையைச் சடையிற் பரித்து" என்று எழுந்த மங்கல மொழித் தொடரை ஆரம்பமாகக் கொண்ட முதல் பாடலை பாடி, எழுதிமுடித்தார்கள். 

சுவாமிகளது மனதில் இந்த பாடலை இறைவன் ஒப்புக் கொண்டதாகத் தோன்றி 'இனி தினமும் உணவருந்தும் முன்பு ஒரு பாடல் வீதம் நூறு பாடல்கள் எழுதக் கடவேன்' என உறுதிசெய்து கொண்டார்கள்.அவர் தம் ஆன்மா சிவமனம் கமழ்ந்திருந்தது. திருமுருகபெருமானிடம் நிலை கொண்டிருந்தது. திருப்புகழில் ஊறித் திளைத்திருந்தார். தமது குருவாக ஸ்ரீமத் அருணகிரிநாதப் பெருமானின் பெயரை வைத்தே முடிப்பதாக உறுதி பூண்டார். குருவருளும் திருவருளம் சித்தித்தது.


ஒரு நாள் இரவு சுவாமிகளது கனவில், அழகிய சைவர் ஒருவர் தோன்றினார். அவர் சுவாமிகளை அழைத்துக்கொண்டு ஒரு பாழடைந்த மண்டபத்தை அடைந்தார்கள் அங்கு ஒரு வாழையிலையில்அன்னமும் பாலுமிட்டுப் பிசைந்து " அன்பனே! என்னோடு இதை உண்பாயாக" என்று கூறி இருவரும் சேர்ந்து அந்த அமுத உணவை உண்டனர். பிறகு சுவாமிகளை நோக்கி "இனி உன் இருப்பிடம் செல்" என்று கூறி மறைந்தார். இச் சம்பவம் நேர்ந்ததற்கு பிறகுதான் சுவாமிகளுக்கு பாடும் சக்தியும், நூல் ஆராய்ச்சியும் அதிகரித்தது.

சுவாமிகள் தந்தையார் கட்டளைப்படி வியாபாரம் செய்து வந்தார்கள். அச்சமயம் இராமேஸ்வரத்தில் இருந்து வந்த சுப்பிரமணிய பக்தரான சேதுமாதவய்யர் எனும் பெரியார் சுவாமிகளைச் சந்திக்க நேர்ந்தது. சுவாமிகள் இயற்றி அருளிய "அமரர்கோ" எனும் முதல் பாடலே அப் பெரியவரை கவர்ந்தது. பிறகு ஒரு விஜயதசமி நாளன்று நமது சுவாமிகளை அழைத்து, இராமேஸ்வரத்தில் இருக்கும் அக்னிதீர்த்தத்தில் மும்முறை மூழ்கவைத்து "சுப்பிரமணிய சடக்ஷர மந்திரத்தை உபதேசித்தருளினார்கள். சுவாமிகளது வயது சுமார் இருபத்தைந்து ஆகியும் திருமணம் செய்துகொள்வதில் ஈடுபாடு இல்லாது இருந்தார்கள். அதன் பிறகு திருவாறெழுத்தை உபதேசித்தருளிய ஆசிரியர் சேதுமாதவய்யர் அவர்களின் உத்தரவுப்படி திருமணத்திற்கு இணங்கினார்கள். காளிமுத்தம்மாள் எனும் மங்கையர் திலகத்தை வெகுதான்ய வருஷம் (கி.பி.1878) வைகாசி மீ சுபமுகூர்த்தத்தில் திருமணம் புரிந்து கொண்டார்கள். இல்லறத்தின் இனிய பயனால் இரண்டு ஆண்குழந்தையும், சிவஞானாம்பாள் எனும் பெண்குழந்தையும் பிறந்தனர்.

சிவஞானாம்பாள் பிறந்து ஒரு ஆண்டு ஆவதற்க்குள், ஒருநாள் இரவு அக்குழந்தை பால் குடியாமல் அழுது கொண்டிருந்தது. அழுகையின் காரணமறியாத அம்மையார் குழந்தையின் அழுகை நிற்பதற்க்கு சுவாமிகளிடம் திருநீறு தருமாறு வேண்டினார்கள்.

அதற்கு நம் சுவாமிகள் "இப்போது நான் ஒருவருக்கும் திருநீறு கொடுப்பதில்லை. ஆண்டவனிடம் கேள் தருவார் என்றார்கள். அப்போது காவியுடையுடன் ஒருவர் தோன்றி, " இக் குழந்தையை கொடு" என்று கேட்டு வாங்கி அதன் உடம்பெல்லாம் திருநீறு பூசி, 'இனி குழந்தை அழாது' என திருவாய் மலர்ந்தருளி மறைந்தார். பின் குழந்தை அழாதது கண்ட சுவாமிகள் அம்மையாரிடம் 'யாது பரிகாரம்' என வினவினார்கள். அதற்கு அத்தாய் நடந்ததைக் கூறினார்கள். அதுகேட்டு சுவாமிகள் இறைவனை திருவருட்செயலை எண்ணி வியந்தார்கள்.

சுவாமிகள் முருகவேளைப் பாடியும், அவன் திருவடி மீது சிந்தையைச் செலுத்தியும் வந்த வேளையில் ஒருநாள் சுவாமிகளின் தந்தை சாத்தப்பப்பிள்ளை அவர்கள் சிவபதமடைந்தார்கள். அதுமுதல் குடும்பப் பொறுப்புகள் அனைத்தும் சுவாமிகளுக்குப் பதிலாக முத்தையப்பப் பிள்ளையவர்கள் ஏற்று நடத்தினார்கள்.


சுவாமிகள் ஒருநாள் தென்னதோப்பைப் பார்வைவிட நடந்து சென்றார்கள். அச்சமயம் சுடுமணலில் இருந்த ஒரு முள் அவர் பாதத்தில் ஏறி மிகுந்த வேதனையைக்கொடுத்தது. முள்ளை எடுக்க இயலவில்லை. அன்றிரவே தச்சு வேலை செய்யும் ஒரு ஆசாரியின் கனவிலே முருகவேள் தோன்றி, "என் அன்பன் அப்பாவுக்கு பாதக்குறடு செய்து கொடு" என்று கட்டளை இட்டு மறைந்தார். அந்த ஆசாரி விடிவதற்குள் பாதக்குறடு செய்து கொண்டு வந்து சுவாமிகளிடம் கொடுத்தார். கனவிலே நடந்ததையும் கூறி சுவாமிகளிடம் ஆசீர்வாதம் பெற்றுச் சென்றார். இந்நிகழ்ச்சியை ஸ்ரீமத் குமாரசுவாமி யத்தில்..........

கொடிய கோடையிற் சுடும ணற்கணே                                                                           குருதி பாயவெ னடியி லேறுமுள்...........
என்று தொடங்கும் பாடலில் சுவாமிகளே குறிப்பிடுகிறார்கள். 
சுவாமிகள் யோகசித்தி பெற, மனத்தை அடக்கி உடலை தகுதியானதாக்க உப்பு,புளி, நீங்கிய உணவை பகல் ஒருமுறை மட்டுமே உட்கொண்டு வந்தார்கள். அதனால் சுவாமிகளின் உடல் பலஹீனமடைந்து போர்த்திய எலும்புக்கூடாக ஆகியது. அவர்தம் நிலையை கண்ட சிலர் சுவாமிகளை பார்த்து ...... " கூடிய சீக்கிரம் சென்றுவிடுவார், பறக்கத்தான் பார்க்கிறார், பலிக்கவில்லை" என்று ஏளனம் பேசினார்கள். அதற்கு சுவாமிகள் புன்னகை மட்டுமே பதிலாகத் தந்தார்கள். போகப்போக சுவாமிகளது உடல் மிகவும் பலஹீனபட்டுப் போனது. அதனால் இறைவனிடம் உத்தரவு கேட்க, மீண்டும் "உப்பு சேர்க்கலாகாது" என்று வரவே, அப்படியே கடும் விரதமாக இருந்து வந்தார்கள். அதற்கு பிறகு சில நாட்களில் உடல் பலமடைந்தது கண்டு சுவாமிகள் இறைவனது அருளே என எண்ணி உவகையுற்றார்கள்.

சுவாமிகள் கர வருடம் (கி.பி. 1891) ஆடிமாதம் ஓர் பகல்பொழுதில் அவர் நண்பரான அங்கமுத்துப் பிள்ளையவர்களிடம் "நாளை நான் பழனிக்குப் போகிறேன்" எனக் கூறினார்கள். "எப்போது வருவீர்கள்" என நண்பர் கேட்டதற்கு சுவாமிகள், "சொல்லமுடியாது" என பதிலுரைத்தார்கள். "பழநி வருவதென்பது குமரக் கடவுளின் கட்டளையா?" என கேட்டதற்கு தமது சுவாமிகள் "ஆம்", என்று உரைத்தார்கள். பிறகு பிள்ளையவர்களுக்கும் மௌனமாகச் சென்று விட்டார். 
சுவாமிகள் அன்று மாலை வீட்டின் மேல்மாடியில் தென்புறமாக நோக்கி இறைவனை வேண்டி நின்றார்கள். எதிரே இறைவன் தோன்றி, "நானா உன்னை பழநிக்கு வரச் சொன்னேன்? என் கட்டளை என ஏன் பொய் கூறினாய்" என்று பல்லை கடித்து, முகம் சுளித்து, சுட்டுவிரல் அசைத்து சுவாமிகளை கோபித்தார். சுவாமிகள் நடுநடுங்கி, கண்கள் மூடி, என் ஆண்டவனே! இனி எக்காலத்திலும் பொய் சொல்லமாட்டேன். ஆன்மலாபம் கருதியே அப்பொய் தோன்றிற்று. பொருத்தருள்க" என மனதார விடையளித்தார்கள். அது தெரிந்து கொண்ட பெருமாள், " அந்த ஆன்மலாபமென்னால் தர இயலாதா?" என்று திருவாய் மலர்ந்தருளி "இனி நான் வருக என்று கூறும் வரை பழநிக்கு நீ வரக்கூடாது. இது என் கட்டளை ! வருவதில்லை என்று சத்தியம் செய்துகொடு" என்றார். அதற்கு சுவாமிகள் " அப்படியே " என்று மனதினால் இயம்பியது கண்டு, அப்பெருமான் மறைந்தருளினார். சுவாமிகளது இறுதிக் காலம்வரை இறைவனிடமிருந்து பழநி செல்வதற்கான உத்தரவும் வரவில்லை. அதன்படியே சுவாமிகளும் பழநி செல்லமுடியவில்லை. 
சுவாமிகள் தமக்கு ஏற்பட்ட ஒரு துன்பம் நீங்க கி.பி.1891ஆம் வருடம் நவம்பர்மாதம் 24ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று சண்முக கவசம் பாடி அருளினார்கள். சுவாமிகள் தம் அன்பர் ந. சுப்பிரமணிய பிள்ளையவர்கள் வேண்டுகோளுக்கிணங்க, மேற்படி வருடம் டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணத்தை பாடி நிறைவு செய்து அருளினார்கள். 


சுவாமிகள் இராமநாதபுரம் பிரப்பன்வலசையில், கி.பி. 1894ம் வருடம் பங்குனி மாதத்தில் ஒருநாள் "இவ்வூர்தான் நிஷ்டைக் கூடி தவம் இயற்ற தகுதியான ஊர்" என்று எண்ணி, அன்பர்கள் மூலம் அவ்வூர் மயானத்தில் ஒரு கொட்டகை அமைக்கச் சொன்னார்கள். கொட்டகையின் நாற்புறமும் வேலி அமைத்து, கொட்டகையின் நடுப்பகுதில் ஒரு மனிதன் உட்காருமளவிற்கு குழியொன்றும் அமைத்தார்கள். சுவாமிகள் பல அன்பர்கள் குழுமியிருக்க கொட்டகைக்குள் பிரவேசித்து, குழிக்குள் அமர்ந்து முப்பத்தைந்து நாட்கள் கடும் தவமியற்றி னார்கள்.
முதல் ஆறு நாட்கள் மனம் அடங்க மறுத்தது. ஏழாம் இரவு ஜடா மகுடமுடைய இரு முனிவர்களோடு ஓர் இளைஞர் சுவாமிகளின் முன் தோன்றினார். அவர் சுவாமிகளிடம் ஓரிரு ரகசியமான வார்த்தைகளை வெளியிட்டுவிட்டு மேற்குத் திசை நோக்கிச் சென்று மூவரும் மறைந்தருளினார்கள். பிறகு முப்பத்தைதாம் நாள் இருபத்திநான்கு நாழிகைக்குமேல் சுவாமிகளின் தலைக்கு மேல் ஆகாச வெளியில் ஒரு பெருஞ்சப்தம் உண்டாக்கியது. மேலும் ஒரு பேரொளியும் பரவியது. அதே சமயத்தில் "எழுந்து விடு" ஆன்ற அசரீரியும் கேட்டது. சுவாமிகள், "யார் கூறினாலும் நான் எழ மாட்டேன். செவ்வேள் கட்டளை கிடைத்தால் எழுவேன்" என்றார்கள். பின்பு அவ்வேள் கட்டளை "அப்படியே செய்க" என்று சுவாமிகளுக்கு அசரீரியாகக் கிடைத்ததும் எழுந்து, அந்த இடத்தை மும் முறை வலம் வந்து வணங்கினார்கள். பிறகு பல அன்பர்களின் ஆரவார உபசரணையுடன் ஊருக்குள் பிரேவேசித்தார்கள். 
------ இடையறாது நிற்க விழைதல்---------
பிறகு பல புண்ணிய தலங்களுக்கு யாத்திரை செய்த நாம் சுவாமிகள் சென்னை வந்டைத்தார்கள். சென்னையில் ஸ்ரீமதி பங்காரு அம்மாளின் வேண்டுகோளின் படி தங்கி, அவ்வமையாருக்கு திருவாறெழுத்தை விதிமுறையாக உபதேசித் தருளினார்கள்.
நமது சுவாமிகள் கி. பி. 1896ம் வருடம் சிதம்பரம் சென்று பரிபூரணானந்தபோதம், தகராலய ரகசியம், திருப்பா முதலிய பல நூல்கள் இயற்றி அருளினார்கள். பிறகு, சுவாமிகள் 1897 வருடம் மாசி மாதம் பன்னிரு மகாமக புண்ணியகால ஸ்நானம் கருதி கும்பகோணம் வந்தார்கள். சுவாமிகள் மக்கள் வெள்ளத்தின் நடுவில் செல்லும்போது ஒரு குறுகிய வழியில் முன்னும் பின்னும் கூட்டம் நெருக்க, நசுங்கியும், துவண்டும் பலர் இறக்க நேரிட்டது. இது கண்டு சுவாமிகள் இறைவனை சிந்தித்து அவ்விடத்திலிருந்து மீட்சி பெற்றார்கள்.                                                                                                              இச்செய்தியை சுவாமிகள் 
"குடந்தை யிற்சிகா                                                                                                                       துற்ற மன்பதைக் குண் ணெருங்கி நா                                                                         னுயிர்த்த துன்செய் லென்ற்கு மென்றடை" 
------------இடையறாது நிற்க விழைதலில் கூறியுள்ளார்கள்.

பிறகு பல புண்ணிய தலங்களுக்கு யாத்திரை செய்த நாம் சுவாமிகள் கி. பி. 1902ம் வருடம் ஆடிமாதத்தில் காசி யாத்திரையை மேற்கொண்டார்கள். பெத்தவாடா, கோதாவரி, விசாகப்பட்டினம், ஜகந்நாதம், கயா முதலிய தளங்களுக்குச் சென்று இறுதியில் காசி மாநகரை அடைந்தார்கள். அங்கு குமரகுருபரர் சுவாமிகள் திருமடத்தில் தமக்கிடப்பட்ட உணவை உண்டுவிட்டு, கைகழுவி வரும்போது, வைத்துவிட்டு போன தம்முடைய மேலே போர்த்தும் வெள்ளை ஆடை இல்லாதது கண்டு, சுவாமிகள் சிந்தனையுடன் நின்றார்கள். அச்சமயம் இரண்டு புதிய கஷாய வஸ்திரங்களுடன் வந்து நின்ற கஷாயதாரி ஒருவர், " இது குமரகுருபரர் சுவாமிகள் மடம், அந்த பெரியாரின் பெயரை உடைய சுவாமிகளே! இந்த ஆடையை பெற்றுக்கொள்ளுங்கள். என்னையறியாமலேயே இந்த காரியம் என் மனதில் உதித்தது" என்று வேண்டி நின்றார். சுவாமிகளும் குமரகுருபரருடய வாக்கு எனக் கருதி பெற்றுக் கொண்டார்கள். அது முதல் கஷாய ஆடையையே தரிக்கலானார்கள்.


இதன்பின், சுவாமிகள் திருவனந்தபுரத்தில் சீடர் ந. சுப்பிரமணிய பிள்ளையவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி, கந்த சஷ்டி வைபவத்தில் கலந்து கொண்டார்கள். ஒரு சமயம், சிதம்பரத்தில் தாம் இயற்றியருளிய "தங்க ஆனந்த களிப்பு" எனும் பாடலை ஒரு சைவத் திருவடியார் முன் படித்துக் காட்டினார்கள். இறைவன் அருள்படி, அவர்தம் வீட்டில் வைத்திருந்த புதியதொரு உருத்திராக்ஷ கண்டிகையை சுவாமிகளது திருக்கழுத்தில் அணிவித்தார்கள். அக்கண்டிகை ஒன்றே சுவாமிகளது கழுத்தை இறுதி வரை அலங்கரித்தது.                                                                                                                              --- ஸ்ரீமத் குமார சுவாமியம் ---
சுவாமிகள் சிதம்பரம் பின்னத்தூர் வந்தடைந்து கீதைக்கு அர்த்தம் சொல்லியும், தம்மால் இயற்றி அருளப்பட்ட நூல்களை பிரசங்கித்தும் சிவ நிஷ்டையில் இருந்தும் வந்தார்கள். பிறகு தென்தல யாத்திரை சென்று பல திருத்தலங்களை தரிசித்து வணங்கினார்கள். 
கி. பி. 1918ம் வருடம் ஆடி மாதம் 7ம் தேதி இயற்றப்பட்ட "குமரஸ்தவம்" எனும் மஹாமந்திரத்தை, சுவாமிகள் தமக்கு ஏற்பட்ட வெப்புநோய் நீங்க பாடி அருளினார்கள். இந்த "குமாரஸ்தவம்" அருச்சனை செய்யும் காலத்தில் சொல்லத் தக்க மந்திரமாகும்.
சுவாமிகள் கி. பி. 1923ம் வருடம் டிசம்பர் மாதம் 27ம் தேதி சென்னை தம்புச் செட்டி தெருவில் நடந்து வந்துகொண்டிருக்கும் போது ஒரு குதிரை வண்டி மிரண்டு ஓடி வந்தது. எதிர்பாராதவிதமாக அதன் சக்கரம் நமது சுவாமிகளின் இடது கணைக்காலில் ஏறிக் காலை முறித்து விட்டது. இரத்தம் வழிந்தோட சுவாமிகள் சென்னை பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கல். அங்கு பரிசோதனை செய்யபட்டப் பின் சுவாமிகள் உணவில் உப்பு சேர்க்காது கடும் விரதமாக இருப்பதால் கால் முறிவு சேராது என்றும், முழங்கால் வரை வெட்டி எடுப்பதே சிறந்தது எனவும் மருத்துவ நிபுணர்கள் முடிவு செய்தார்கள். அதற்கு சுவாமிகள் கால் துண்டிப்பதை பிடிவாதமாக ஒப்புக்கொள்ளவில்லை.
பிறகு, சுவாமிகளுக்கு பிரதம சிகிச்சை செய்து " மன்றோ வார்டு" என்ற வார்டில் 11ம் இலக்க படுக்கையில் அனுமதித்தார்கள். இப்படியாக 11 நாட்கள் கழிந்தன. சுவாமிகள் கால் முறிவின் வேதனை தாங்க முடியாமல் 'முருகா' என்றழைத்து வணங்கினார்கள். அன்று இரவு குமாரபகவானின் வாகனமாகிய மயில்கள் மேற்கு திசையில் இருந்து ஆகாயம் மறைய தோகைகளைவிரித்து,நடனமாடி வந்ததை கண்ட நாம் சுவாமிகள் படுக்கையிலிருந்தபடியே கைகூப்பி வணங்கினார்கள். ( இந்த அரிய நிகழ்ச்சியை "மஹா தேஜோ மண்டலத்தார்" மயூர வாகன சேவன விழா எனக் கொண்டாடி, இன்றும் வணங்கி, வழிபட்டு வருகின்றார்கள்.)
மயூர நாதனின் வாகனமான மயில்களை கண்ட நம் சுவாமிகள், குமார பகவானையும், சிறு குழந்தை வடிவில் கண்டார்கள். சுவாமிகள் தம் படுக்கையில் தம்மோடு ஒரு செவ்விய குழந்தை ஒன்று படுத்திருப்பதை கண்டு மகிழ்ச்சி அடையும் போது அந்தக் குழந்தை மறைந்ததையும் கண்டார்கள். இறைவனது திருநாமங்களில் ஒன்றை பலமுறை இடையறாது சொல்லி வந்தார்கள்.


இறைவனது திருவுளப்படி பதினைந்து நாட்களில் சுவாமிகளது காலிலுள்ள முறிந்த எலும்பு ஒன்றுகூடி வளர்ந்து சரியானது. இரணமும் ஆறிவிட்டது.                          ( -இதன் X - RAY- படம் அசோக சாக வாசம் புத்தகத்திலும், சென்னை பொது மருத்துவமனை 11வது வார்டிலும் இன்றும் காணலாம்)
பிறகு பெங்களூர் சென்றிருந்த நம் சுவாமிகள் 1928ம் வருடம் ஜூலை மாதம் 15ம் தேதி சென்னை வந்தடைந்தார்கள். சுவாமிகள் தமது சீடரான பு. சின்னசாமி பிள்ளையவர்களை அழைத்து. இறைவன் திருவுளப்படி சென்னை, திருவான்மியூரில் ஒரு நிலம் பார்க்க கூறினார்கள். அதுவும் வேகமாக நடைபெற வேண்டுமென பணித்தார்கள். சுவாமிகள் வைகாசி 1ம் தேதி (1929) இரவு தமது சீடர்களை அழைத்து "மயூர வாகன சேவன் விழாவை விடாது நடத்தி வர வேண்டும்" எனவும் தமது உடலைத் திருவான்மியூரிலே சேர்த்துவிடும் படியும் பணித்தார்கள்.
கி. பி. 1929 வருடம் மே மாதம் 30ம் தேதி வியாழக்கிழமை அன்று காலை 7.30 மணி அளவில் நிஷ்டை கூடி இருந்த நம் சுவாமிகள் கண் விழித்து புன்சிரிப்புடன் வணங்கி, யாவரும் அறியவே "சுவாச பந்தனம்" செய்து குகசாயுச்சிய நிலையில் இறைவனடி ஏகினார்கள்.
சுவாமிகளின் திருமேனியை, சீடர்களும் அன்பர்களும் ஆயிரக்கணக்கில் கூடி தரிசித்து அபிஷேக அலங்காரங்களைச் செய்தார்கள். திருப்புகழ் ஓதியும், விருதுகளைத் தாங்கியும் அடியார்கள் புடைசூழ நமது சுவாமிகளின் திருமேனி அழகியதொரு புஷ்பப் பல்லக்கில் மறுநாள் 31.5.1929 அன்று வெள்ளிக்கிழமை காலை 8.15 மணிக்கு சென்னை திருவான்மியூரில் தவக்கோலத்தில் அமரவைக்கப்பட்டார்கள். நல்லதை நாடி வேண்டி நிற்கும் மக்களுக்கு நன்மை பயக்க அழகாக அமர்ந்து, ஒளியின் ஒளியாய் அனைவருக்கும் வேண்டியதை இன்றும் வாரி வழங்கி, பேரோளியாகக் காட்சி தருகிறார்கள். 
சுவாமிகள் தம் வாழ்நாளில் மொத்தம் 6666 பாடல்களையும், 32 வியாசங்களையும் திருமுருகபெருமானின் புகழ் மணக்க இயற்றி அருளியுள்ளார். இவைகள் ஆறு மண்டலங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாசா சுவாமிகள் அருளியவைகளுள் பகைகடிதல், குமரஸ்தவம், சண்முக கவசம், பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம் முதலானவை 'மந்திரங்களின் சாரங்களாகத் திகழ்பவை.
ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் ஆலயம், திருவான்மியூர், நடைபெறும் விழாக்கள்:
ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் குருபூஜை விழா                                                                        ஸ்ரீ  அருணகிரிநாத முனீந்திரர் குருபூஜை விழா                                                                     ஸ்கந்த மகா சஷ்டி விழா                                                                                                         மயூர வாகன சேவன விழா                                                                                                       மகா சிவராத்திரி விழா 
ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் ஒவ்வொரு பௌர்ணமியன்றும் இரவில் கண் விழித்து இறைவனது பூஜைகளை செய்வது வழக்கம். இன்றும் பௌர்ணமி தோறும் இரவு 11.30 முதல் 12.30 வரை குமரஸ்தவ கூட்டுவழிபாடாக பூஜை நடைபெற்று வருகிறது. பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் புடைசூழ 41 வருடங்களுக்கு மேலாக பௌர்ணமி பூஜை நடைபெறுகிறது. -----  ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் திருவடியே போற்றி  ....