அத்தியாச்சிரம சுத்தாத்வைத வைதிக சைவசித்தாந்த ஞானபானு
பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளால்,
சென்னை இராயப்பேட்டை ஸ்ரீ பாலசுப்பிரமணிய பக்தஜனசபையில்
17-02-1919 -ல் ஆற்றப்பட்ட விரிவுரை.
சைவ மகிமை
சைவசித்தாந்த ஞானபானு
பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள்
" ஆடும் பரிவே லணி சேவலெனப்
பாடும் பணியே பணியா யருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடுந் தனியானை சகோதரனே "
"இதயபங்கய குகரமே குகை
என்ப தாரிய பாடையில்
அதனுளாய சிதம்பரத் துளி
யமலஞான விண் மெய்யனாச்
சததமுஞ் சுக நடனமேபுரி
தம் பிரானையொர் குகனெனாக்
கதறுமா மறையவனை யன்றொரு
கடவுணா மறியோமரோ"
"பத்தியும் ஞானமும் பரவிடு மார்க்கம்
எத்தனை யோவகை யிருக்கினு மிகத்தில்
முத்திதந் தனுதின முழுப்பல னல்கச்
சத்திய மாவது சரவண பவவே"
இவ்வுபந்நியாச அறிக்கைத் தாளின் தலைப்பிலுள்ள
" உருவாயருவாய் உளதாயிலதாய் .........வருவாய் அருள்வாய் குகனே" எனும் பாடல்
அருணகிரியார் வாக்கன்று. புஷ்பரத செட்டியார் முதன் முதல் அச்சிட்ட கந்தரனுபூதிப்
பதிப்பினின்றும் " தூசா மணியும் ..........பேசா அனுபூதி பிறந்ததுவே " என்னும் பாட்டோடு
முடியும் 43 பாடலை மட்டுங்கொண்டது அந்நூல் என்று உணரலாகும். அச்சரங்கள் 51
ஆதல்பற்றிப் போலும் எட்டுப் பாடல்கள் பின்னர்ச் சேர்க்கப்பட்டன.
மேற்சொன்ன 43- ம் செய்யுளோடு கந்தரனுபூதி முடிகின்றதென்பதே என் கொள்கையும்.
ஆன்மாக்கள் சார்ந்ததன் வண்ணமாந் தண்மையுடையன. யான்இன்று கூறுவது
மஹாத்மத்தன்மையை யடைந்த பேர்கள் நீங்கிய ஏனையோரைக் குறித்ததாகும்.
அதைக்கேட்ட, அதன் பொருளைச் சார்ந்து பயனுறுவீர்களென்பது என் கருத்து.
இன்று யானெடுத்துக்கொண்ட விஷயம் சைவ மிமை என்பது. சிவசம்பந்தம் சைவம்.
இச்சம்பந்தம் எதனால் ஏற்படுவது ? தீக்ஷையினாலா ? அதீக்ஷிதர் காணா குண்ணலினாலா ?
புலாலுண்ணாமையினாலா ? அல்லது பரம்பரையாய் ஒரு குலத்திற் பிறந்த
தன்மையினாலா என்று கவனிக்க வேண்டும்.
அறுபத்துமூன்று நாயன்மார்களில் எல்லோருக்கும் தீக்ஷை செய்யப்படவில்லை.
ஆகையால், தீக்ஷையே சைவம் என்று சாதித்தல்கூடாது. இப்படி சொல்லுவதால் தீக்ஷை
செய்துகொள்ள வேண்டாமென்று யான் சொல்லியவனாகேன். அறுபத்து மூவருட் பலர்
அதீக்ஷிதா அதீக்ஷிதர் காணாமலுண்பதால் பெறும் ஞானமென்னோ ? அதீக்ஷிதரோடு விவாக
சம்பந்தங் கூடாதென்னுங் கட்டுப்பாடு அவரவர் குடும்பலக்ஷணத்தை யொட்டி எழுந்ததொரு
வரம்பென்க. தீக்ஷை பெற்றாருள்ளும் பெறாதாருள்ளும் நல்லவரும்,தீயவரும் இருக்கக்
காண்கிறோம். ஆதலால், தீக்ஷை பெற்று கொள்ளன் மாத்திரையாலேயே இச்சிவ சம்பந்த
உணர்ச்சி ஏற்பட்டுவிடுமென்று சாதிக்க இயலாது.
இனி புலாலுண்ணாமையைப் பார்ப்போம். புலாலுண்ணல் அநாசாரம். ஆனால், புலால்
மறுக்கும் ஆசாரம் ஒன்றால் மாத்திரமே ஒருவற்குச் சைவம் சொந்தமாய்விடாது.
ஆகும் என்றால் ஆடு,மாடு,யானை,ஒட்டை முதலிய சாபக்ஷணிகளுக்குச் சிறப்புச் சொல்ல
நேரிடும். ஆகையால் புலாலுண்ணாமையை நல்ல ஆகாரம் என்ற அளவிற் போற்ற
வேண்டுமேயன்றி, அதுவே சைவம் என்னல் அடாது.
இவை போன்றே, வேறு சில அருமைகள் தாமும் சைவமாகிவிடமாட்டா.
"பூமிக் குழிக்குள் யானிருப்பவன். ஆதலால் யான் சைவன் என்னலாகாது. என்னை ?
குழிக்குள்ளிருக்கும் தவளையும் சைவமாகுமாதலின். ஒருவன், " யான் தலையில்
காலைமாட்டித் தலைகீழாய்த் தொங்க வல்லேன். இது சிவத்துவமல்லவா " எனின்,
வௌவாலும் அவ்வாறு தொங்குகிறதே என்க. " யான் ஊர்களில் வசிப்பதில்லை,
மலைவனங்களிலேயே சஞ்சரிக்கின்றேன். ஆதலின் யான் சைவன் " எனின் பிராணிகள்
பல அப்படி வசிக்கின்றனவே என்க."யான் தண்ணீரில் செபிக்கின்றேன். ஆதலாற் சைவன்"
என்று கூறில், அவர் செபிப்பது யாது ? சிவமந்திரந்தானோ அன்றோ என்று சோதிக்க
வேண்டும். அஃதாயின் மீனைக்காட்டினும் விசேடமுண்டு என்று கூறலாம். "புண்ணிய
தீர்த்தத்தில் மூழ்குவதால் யான் சைவன்" என்னில், மீன்கள் ஏகதேசமாக வன்றி
எப்போதும் அப்படி மூழ்கியுள்ளனவே என்க. " நல்ல பாடல் பாடுகின்றேன், அதனால்
யான் சைவன்" என்னில், வானம்பாடியும் குயிலும் இனிமையாய்ப் பாடுகின்றனவே என்க.
"சைவத் திருமுறை வைத்துக்கொண்டு பாராயணம் பண்ணுகின்றேன்" என்னில், அது மிக
நல்லதேயாயினும் அஃதொன்றினால் மட்டும் ஒருவன் சைவனாய் விடுமாறில்லை என்க.
இவ்வாறே உள்ளானைப் போலும் மாடப் புறாவைப்போலும் நிற்றலாலும் சைவம்
வாய்த்துவிடாது. பாம்புபோல் சின்னாள் வாயுபக்ஷணம் பண்ணுதலாலும், பட்டினியாய்
இருத்தலாலும், காட்டுக்கழுகுபோல் சருகுண்பதாலும், பறவைபோல் ஆகாயத்தில்
பறத்தலாலும், பூசஞ்சாரம் செய்வதாலும் அது சித்திப்பதில்லை.
இப்படியே மூச்சடக்குவதனாலும் தனிச்சிறப்பல்ல. முத்துச் சலாபங் குளிப்பார்க்குமது
கைவருமாலின் " யோகிகள் பிராணாயாமம் பற்றி எழுதியுள்ளார்களே " என்னில்,
சிவயோகிகள் எழுதியிருந்தால் அதுபற்றி யோசிப்பாம் என்க. தேகாப்பியாசத்தில் தேகம்
வலுப்படுவது போலப் பிராணாயாமத்தால் வாத, பித்த, சிலேத்தும சமத்துவம் உண்டாகலாம்.
ஆனால், ஆபத்தும் விளையலாம். துருத்தியைக் கும்பித்து யானும் இளமையில்
பிராணாயாமம் சில காலம் செய்தேன்; அது வேண்டாமென்று உணர்த்தப்பட்ட பின்பதை
நிறுத்தினேன்.
" எரிபெ ருக்குவ ரவ்வெரி யீசன்
துருவ ருக்கம தாவ துணர்கிலார்
அரியயற் கரியானை அயர்த்துப் போய்
நரிவி ருத்தம தாகுவர் நாடரே"
" கான நாடு கலந்து திரியிலென்
ஈன மின்றி இருந்தவஞ் செய்யிலென்
ஊனை யுண்ட லொழிந்துவான் நோக்கிலென்
ஞான னென்பவர்க் கன்றிநன்கில்லையே"
" வேத மோதிலென் சாத்திரங் கேட்கிலென்
நீதி நூல்பல நித்தல் பயிற்றிலென்
ஓதி யங்க மோராறு முணரிலென்
ஈசனை யுள்குவார்க் கன்றி யில்லையே"
" கூட வேடத்த ராகிக் குழுவிலென்
வாடி யூனை வருத்தித் திரியிலென்
ஆடல் வேடத்த னம்பலக் கூத்தனைப்
பாட லாளர்க் கல்லாற் பயனில்லையே"
" கோடி தீர்த்தங் கலந்து குளித்தவை
ஆடி னாலு மரனுக்கன் பில்லையே
ஓடு நீரினை யோட்டைக் குடத்தட்டி
மூடி வைத்திட்ட மூர்க்க னோடொக்குமே"
என்னும் அப்பர் திருவாக்குகளை ஊன்றிப் பார்க்க யான் மேலே கூறியவை தவத்திற்குரியவை
எனினும், அவை சிவத்தை முன்னிட்டுச் செய்யப்படாவிடின் சைவத்திற்குரியனவாகா.
" அவனை யொழிய வமரரு மில்லை
அவனன்றிச் செய்யு மருந்தவ மில்லை
அவனன்றி மூவரா லாவதொன் றில்லை
அவனன்றி யூர்புகு மாறறி யேனே"
என்ற திருமந்திரத் திருவாக்கை யுன்னுக.
சிவம் எனபது அந்வய நாமம். முக்திக்குச் சிவம் என்னும் பேருண்டு. எனவே முத்தி
விரும்புவோரெல்லாம் சைவர் என்று கோடல் கூடும்.
சிவத்திற்குத் தடத்த லக்ஷணம் எனவும் சொரூப லக்ஷணம் எனவும் இரண்டு
லக்ஷணமுண்டு. இவற்றுள் தடத்த லக்ஷணச் சார்பாக மட்டும் இங்குச் சில விவகரிப்பேன்.
திருநீறு, திருக்கண்மணி, சிவ மந்திரம், சிவனுருத்தியானம், சிவனடியார் பூசை ஆகிய
இவை சிவ சம்பந்தமாகி ஒருவனைச் சைவனென அழைக்க யாதொரு தடையுமில்லை.
இவற்றுள் ஒன்றிரண்டு பொருந்தா விடினும், இரண்டு முக்கியம், அவை சிவநாமோச்சாரணமும்
சிவனடியார்பூசையும், சிவமந்திரம் பல விருப்பினும் சிவ சப்தமுள்ள மந்திரமே சைவத்திற்கு
உரியது. அச்சப்தம் முற்றும் சிவ மந்திரம். அதனோடு ஒட்டி வேறு எதையும் சேர்க்கலாகாது.
அச்சப்தம் சிவனை முன்னிட்டிருப்பது சிவனானை வழிநிற்றலும் கேட்கப்படும். எனவே
'சைவன்' என்னுஞ் சொல் மிகச் சிறப்பாக ஏற்படுவது. சிவனது மகிமை எங்கெங்குச்
செல்லுகின்றதோ அங்கெல்லாம் இச்சப்தமும் எழும்.
இச்சிவமூர்த்தியின் விடயமாக ஒருநிலை எல்லாத் தத்துவங்கள் வரையிலுமுள்ளது.
இது சமய நிலை. மற்றொன்று தத்துவாதீதமானது. இது சமயத்திற்குப் புறம்போ எனின்,அன்று.
"சைவசமயமே சமயம்
சமயாதீதப் பழம்பொருளைக்
கைவந்திடவே மன்றுள்வெளி
காட்டுமிந்தக் கருத்தைவிட்டுப்
பொய்வந்துழலும் சமயநெறி
புகுதவேண்டா முத்திதரும்
தெய்வசபையைக் காண்பதற்குச்
சேரவாருஞ் செகத்தீரே."
என்னுந் தாயுமானவர் திருவாக்கைக் கருதுக. பிறசமயங்களைப்பற்றி யான் பேச வரவில்லை.
அவைகளைப்பற்றிப் " பொய் வந்துழலும் " என்று தாயுமானார் புகன்றதன் கருத்தை,
" சமயாதீதப் பழம்பொருள் " என்றதை விளக்குமுகத்தால் புலப்படுத்துகின்றேன். சைவசமயம்
ஒரு மரம் போன்றது. அதில் இலை,அரும்பு, காய், கனி உண்டு. கீழ் நிலையினும் மேல்நிலை
ஏற்றம், எங்கே ஆதி ஏற்பட்டதோ அங்கே அந்தமுமுண்டு. பழத்தில் வித்துண்டு.மேற்பாடலில்
பழம்பொருளை என்பதற்குப் 'பழமாகிய பொருளை' என்று பொருள் கொள்ளலாம். அதனைச்
சைவம் தன்பாற் கொண்டுள்ளது. கிளையிலுள்ள வரை பழம் மரத்தோடு சேர்ந்தது. கிளையை
விட்டு நீங்கின பின்பே புசிப்பர் மானிடர். அப்படி வேறுபடுத்துந் தன்மையில் சைவம்
சமயாதீதமாகின்றது. ஆனால், அப்போதும் அது பழமே. கொம்பரை விட்டுக் களைந்ததுதான்
வேறுபாடு. சமயமே " சமயங் கடந்தமோன சமரச" மாய் விடுகின்றது. ஆனால், பழந்தின்றவன்
காய் தின்னான் என்னும் நுட்பத்தையு முணர்க.
ஆயின், ஒவ்வொருவனும் வரிசையாகத்தான் சமய ஏணிப்படியிற் போக வேண்டுமோ ?
சாமுசித்தனாவான் முற்பிறப்பில் விட்ட விடத்திலிருந்து, இப்பிறவியில் தொடங்குவன்.
"எப்போது விரக்தி தோன்றிற்றோ அப்போதே ஞானநெறி நிற்க".என்பது சுருதி. இதற்குக்
காலவரம்பில்லை. சரியை, கிரியை, யோகங்களை எந்நாளும் ஒவ்வொருவனும் செய்ய
வேண்டுமென்னல் தவறு. வேண்டுமென்னில், ஒருநாளும் முத்தியில்லாமற்போம்.
இங்ஙனம் கூறிய சைவசமயம் இறைவனனுக்கிரகத்திற்கு நிலைக்களமாய் விளங்குவது.
இவ்வநுக்கிரகத்தை ஐம்முகச் சிவம் அறுமுகச் சிவம் என்னும் இரண்டு மூர்த்தி விஷயமாய்ப்
பெறலாகும். இங்கு ஐம்முகச் சிவனை பற்றிப் பேசுவல். சாதகற்குச் சமய ஏற்பாடு அவசியம்.
அஃதில்லாவிடில் அவன் முற்சி, காலில்லாதவன் நடக்க முயலுவதை யொக்கும். மக்கள்
வாழ்க்கைக்கு ஏதோ ஒரு சமயம் வேண்டும்.
' திக்பஸ்ம ரஹிதம் பாலம், திக்கிராமம் அசிவாலயம்திக் அநீசார்சனம் ஜன்ம திக்வித்யா
மசிவாச்ரயம் ' என்னும் சுருதி யாரை நோக்கிக் கூறுகின்றது ? பொதுவில் யாவரையும்
நோக்கியே, இந்த பிருஹஜ்ஜாபாலச் சுருதியின் பொருள் ' பஸ்ப மணியாத நெற்றியைச்
சுடு. சிவாலய மில்லாத கிராமத்தைக் கொளுத்து. சிவார்ச்சனை இல்லாத ஜன்மத்திலே
தீயை வை. சிவனை யாச்சிரயிக்காத சாத்திரத்தை எரித்து விடு.' என்பதாம். எனினும்
சிவனடியார்க்கு அது சிறப்பு வகையில் முக்கியமாகும். ' பூத்யின ப்ரமதி தவ்யம் ' என்னும்
தைத்திரீயம் திருநீற்றை விடக்கூடாதென்று வற்புறுத்தி ஆணையிருக்கிறது. சிலர்,
மனக்குவிப்பைப் பற்றி இப்படி வற்புறுத்தாதது சாம்பற்பூச்சுக்கு இந்த மகிமை தருவது
எற்றுக்கோ? திருநீறணிகவென்னும் விதி அவசியம்தானோ என்று ஆசங்கிப்பர். கடவுள்
எதை எதை ஏன் அமைத்தார் என்று நாம் காரணஞ் சொல்ல முடியுமா? ஒரு மரத்தில்
பூக்கள் பல நிறத்தோடு பூத்தற்குக் காரணங் கூற முடியுமோ? முகத்தில் இரண்டு
கண்ணுமிருப்பானேன்? பின்புறமேன் இரு கண்களில்லை. இப்படிப் பல கேட்கலாம்.
ஆகையால், எது சிவனால் கட்டளையிடப்பட்டதோ அதைச் செய்க. ' செய்யாமல்
இருந்தாலென்ன ' என்பது கடவுள் கட்டளையை மீறினாலென்ன என்று கேட்பதேயாகும்.
ஆனால் இங்கு கவனிக்க வேண்டியது, இது கடவுள் கட்டளைதானோ என்பது.
' மந்திரமாவது நீறு ' " வேதத்திலுள்ளது நீறு " என்றெல்லாம் எழும் ஆளுடைய பிள்ளையார்
திருவாக்கே சாக்ஷி. அவர் அதுகொண்டு சமணக் கூன்பாண்டியன் சுரந் தீர்த்தார்.
அச்சுரத்தைத் தீர்க்க அவர்க்கு வேறு வகையிருந்தும், சைவ சின்னமாகிய விபூதியைக்
கொண்டு நீக்கி அதன் பெருமையை நாட்டினார். நோயைக் கொல்ல விபூதி கருவியாயிற்று.
சிவபெருமான் திருவுள்ளத்தை நாமறியாவிடினும் இக்காரியத்தில் திடபத்தியுண்டாக
வேண்டும். வேறு மருத்துவ நூற் காரணங்களு மிருப்பினுமவை ஈண்டு வேண்டப்படா.
சிவனாணைக்குக் கீழ்ப்படிக. ' வெண்ணீ றணிகிலாதவரைக் கண்டால் அம்ம நாமஞ்சுமாறே '
என்றவிடத்து. சிவ வழிபாட்டார்க்கு இது போதிக்கத்தக்கது. படாதார்க்குப் போதிப்பத்
தக்கதன்று என்பது மணிவாசகர் கருத்து. ஒரு சமய இனத்தவரென்னும் சமய ஒற்றுமை
நோக்கி இங்ஙனம் அருளினாரென்று நினைக்கின்றேன்.
இங்கு ஒரு சிறிது சைவ சமய குரவர் பெருமையைக் குறிக்கக் கடவேன். அவர்கள்
தெய்வ மகிமை பெற்று விளங்குவோராவர். வடமொழியில் பல ஆசிரியன்மார்கள்
நூல்களுள. ஆனால் அவையெல்லாம் அவ்வம் முனிவர்களருளிய மொழிகளே என்பதற்குச்
சான்றில்லை. அன்றியும் அவை மிகவும் பண்டையன. ஆனால் நால்வர்கள் கருத்துக்களை
அறிவிக்க அவர்கள் அருட்பாடல்களே உள்ளன. அவை எழுந்த காலமும் இரண்டல்லது
மூன்றாயிர ஆண்டுகட் குட்பட்டதே. பதினென் புராண வாக்கியங்களனைத்தையும் வியாச
வாக்கியம் என்ன முடியாது. பிரமசூத்திரமட்டும் அவர் வாய்மொழி யென்னலாம். பாடியம்
எழுதினோர் சுருதி துணைகொண்டு பலவாறு எழுதி,அவரவர் உரையையே 'சுருதி சம்மதித்தது',
'சரஸ்வதி ஒப்பியது' என்றெல்லாம் உயர்த்திக் கூறலாயினர். இந்நூல்களை யெல்லாம்விட
நம் சமயாசாரியார் அருளிப்பாடுகள் சிறந்தவை. அவர்கள் செயல்கள் சிவன் ஒருவனுளன்
என்பதைக் காட்டுகின்றன. இதையும் நம்பாத ஒருவன் வேறெதைத்தான் நம்புவான்?
மற்ற பல நம்பிக்கைகளினின்றும் அவர்கள் வாக்கியங்களை நம்பல் சிறந்ததாகும். அவர்கள்
பாடல்களைச் சிவபெருமான் அங்கீகரித்துள்ளார். அவர்களை நம்பினோர் அவர்கள் அடைந்த
இடத்தை அடையலாம்.
இனி ' உத்திராக்க ' மென்பது ' ருத்ரம் ' ' அக்ஷம் ' என்னும் இரண்டு சொற்களாலாயது.
அதன் வரலாறு நீவிரறிந்ததே. அதுவும் சிவசம்பந்தமுடையது. திருநீற்றிற்குள்ளது போலவே
இதற்கும் மகிமையுண்டு.
சிவமந்திரமாவது மறக்கக் கூடாததோர் தெய்வவொலியென்று சுந்தரமூர்த்தி நாயனார்
" நற்றவா வுன்னை நான் மறக்கினும் சொலுநா நமச்சிவாயவே " என்னும் அரிய மொழிகளால்
அறிவுறுத்தியருளினார். இந்த மந்திரம் வேத இதயத்துள்ளது. சைவர்க்கு இது இன்றியமையாதது.
' மந்திரம் ' என்னுங் கிளவி, நினைப்பவனைக் காப்பது என்னும் பொருளுடையது. இச் சிவ
மந்திரத்தைத் தூலம், சூக்குமம், காரணம் என்று நூல்கள் பிரிப்பினும் அவையெல்லாம்
உண்மையில் ஒரே பயனுள்ளவையே. ஆகமக்காரர் இதில் பதி பசு பாச லக்ஷணங்கூற
முற்படுவர். எனக்கு இதில் தடையில்லை. இம்மந்திரம் செபிப்போர் பிறமந்திர மெதையுங்
கையாளார். பின்னரக் காரணங் காட்டுவல். எனது கோட்பாட்டை,
" மடமோட்டும் கருணைதனை மறவேன்
நெஞ்சுள வளவுமாற் றார்நூலைத்
தொடமாட்டே னவருரைக்கு முரைகேளே
னளியாயத் தொடக்கர் கோட்குட்
படமாட்டே னருள்சுரந்து வினாயவொரு
மொழிப்பயனிற் படரு நோக்கம்
விடமாட்டே னினிதளித்தி யெனதுகுகப்
பிரமமென விளங்கெம் மானே "
என்னும் பாட்டுணர்த்தும்.
ஆசாரிய சுவாமிகள் நால்வரும் ஒரே தெய்வ உபாசகர் என்பதைச் சைவர்கள் கருத்தூன்றிப்
பார்க்கவேண்டும். பின்வரும் எடுத்துக் காட்டுகளைக் கருதுக.
" கருமா னுரியாடைக்
கரைசேர் கண்டதெம்
பெர்ருமான் கழலல்லால்
பேணா துள்ளமே " - சம்பந்தர்
" சென்றுநாம் சிறுதெய்வம்
சேர்வோ மல்லோம்
சிவபெருமான் திருவடியே
சேரப் பெற்றோம் " - அப்பர்
" மறிசே ரங்கையனே
மழபாடியுண் மாணிக்கமே
அறிவே உன்னையல்லால்
இனியாரை நினைக்கேனே " - சுந்தரர்
" கொள்ளேன் புரந்தரன் மாலயன்
வாழ்வு குடிகெடினும்
நள்ளேன் நினதடியா ரொடல்லால்
நரகம் புகினும்
எள்ளேன் றிருவரு ளாலே
இருக்கப்பெறி னிறைவா
உள்ளேன் பிறதெய்வ முன்னையல்லா
தெங்க ளுத்தமனே " - மாணிக்கவாசகர்
இங்ஙனமே அருணகிரிநாதரும்,
" படிக்கின் றிலைபழ நிந்திரு
நாமம் படிப்பவர்தாள்
முடிக்கின் றிலைமுரு காவென்
கிலைமுசி யாமலிட்டு
மிடிக்கின் றிலைபர மானந்த
மேற்கொள விம்மிவிம்மி
நடிக்கின் றிலைநெஞ்ச மேதஞ்ச
மேது நமக்கினியே "
என்று முடிவாகக் கூறுகின்றார். இன்னன பல்ல. இந்நிலை வடமொழி மறைக்கும் சம்மதமானது.
உதாரணம் :
( அ ) " சிவ ஏகோத்யேயச்
சிவம்கரஸ் ஸர்வமந்யத் பரித்யஜ்ய " ( அதர்வசிகை )
{ பொருள் : அந்நியமான யாவையும் விட்டு, சிவமெனும் பெற்றியால் மங்களத்தைச் செய்யும்
சிவனையே தியானிக்க வேண்டும் }
( ஆ ) " தஸ்மாத் ஸர்வாந் பரித்யஜ்யத் யேயாந்
விஷ்ண்வாதி காந்ஸுராந்
சிவஏவ ஸதாத்யேயஸ் ஸர்வ
ஸம்ஸார மோசக " ( சரபோபநிஷத் )
{ பொருள் : ஸம்ஸார துக்கநாச முக்திப் பிராப்தியின் பொருட்டு விஷ்ணு முதலிய ஸர்வ
தேவர்களையும் விட்டு எஞ்ஞான்றும் தியேயனாகவுள்ள சிவனையே தியானிக்க வேண்டும். }
இவை போன்ற பிரபலப் பிரமாணங்கள் ஒருவனுக்குப் பல மூர்த்தி வழிபாடு கூடாது என்று
கூறுவது நன்றாய்த் தெரிகின்றது. ஒரே மூர்த்தியும் ஒரே மந்திரமும் வேண்டும். இதைச் சைவர்
நன்கு கவனிப்பதில்லை. பல தெய்வ வழிபாடு அவர்கட்குக் கூடாது. சொருப லக்ஷணத்திற்குப்
போனால் எல்லை ஒன்றும் ஏற்படாது. அது ஞானகட்குரியது. ஏனையோர் உருவத்தைப் பற்றிச்
சொல்வோர், சரியையாதி மூன்றும் மூர்த்தியைப் பற்றியவை யாதலின், சொரூபம் மூர்த்தமல்ல.
மூர்த்தி அதற்கு ஆசாரியன் பெரும் பாலோர் சாரூபத்திற்குள் நிற்போர் இவர்கள் ஒரே மூர்த்தியை
வழிபடாவிடினும் பொதுக் கதிக்குரியராய் இந்திரபதம் கிடைக்கப்பெறுவர். தியானமென்பது
ஒரு மூர்த்தி பாவனையிலாவது இரண்டு மூர்த்தி யுபாசனை கூடாது. இப்படிச் செய்வது,
ஒரு கோயிலை இடித்து இன்னொரு கோயிலைக் கட்டுவதை யொக்கும். சிவனையே கதியாகக்
கொள்பவன், விண்டுவாதி தேவர்களை விடவேண்டும். பிற மூர்த்தி யுபாசகர்கட்கும் இதுபோன்ற
நியமம் ஏற்றதே. ஆனால் மற்ற தேவர்களைக் கண்டால் பொதுவகையில் வழிபடுமின். பல
சில்லரை மந்திரங்களை விரும்பன்மின். எத்துன்பம் வரினும் உம்மொரு மூர்த்தியையே
கொண்மின். ஆசாரிய சுவாமிகள் நால்வரும் சிவனைத் தவிர வேறெத் தெய்வத்தின்மேலும்
பாடவில்லை, கருதுமின். அவர்கள் காலத்துக்கு முன்பு பல தெய்வ வழிபாடிருந்தது. அவர்கள்
ஒரே தெய்வம் வேண்டுமென்று வற்புறுத்தினர்.
கிறிஸ்துவ மதத்தில் கிறிஸ்துநாதரே மூர்த்தி ஸ்தானத்திலுள்ளார். இஸ்லாத்தில் முகமதுநபி
அந்நிலையில் நிற்கின்றார். இவ்வுண்மைகளை யெல்லாம் கருதி, சைவ சமயாசாரியர்கள்
உபதேசித் தருளியபடி சைவர் ஏகமூர்த்தி வழிபாட்டில் உறைந்து நிற்கக் கடவர்.
உங்கட்குச் சிவன்கூட வேண்டியதில்லை சம்பந்தரைப் பற்றினால்சாலும். இவரைப் பற்றினால்
சிவனைப் பற்றியுள்ள இவர், அவரிடம் உங்களைச் சேர்ப்பார். சீகாழிக்கண்ணுடைய வள்ளலார்க்
கிம்முறை பயன் பட்டது.
" என்னாணை யென்னாணை
யென்னாணை யேகமிரண்
டென்னாமற் சும்மா
இருவென்று - சொன்னான்
திருஞான சம்பந்தன்
சீகாழி நாட
னருளாளன் ஞான
வினோதன் "
என்னும் அவர் திருவாக்கால் உணர்க.
முத்தியிலிருப்பவர் தோன்றுவரோ என்று ஐயுறவேண்டா. திருவுளப் பாட்டினபடி எதுவுமாம். அதனால்
இவர் முத்திநிலை கெடாது. இப்படிப் பல இருக்கலாம்.
இப்பெருநிலை இந்நாட் சைவர்க்கு வெகு தூரமாய்விட்டது. நால்வர் பாட்டைத் தாளம் போட்டுப்
பாடுகிறார்கள், ஆனால், பல தெய்வங்களையும் கும்பிடுகிறார்கள். இச்சென்மம் கடைத்தேறுதற்கு
ஒரு தெய்வ வழிபாடு அவசியம். இது செய்யாதவன் முத்தி மார்க்கத்தின் முதற் படியிலும் கால்
வைக்காதவன் என்று கட்டுரைக்கின்றேன். அன்புடையீர் ! காட்டேரி, மாரி முதலியவற்றைக்
கும்பிடாதீர்கள். அதனாலுங்கள் பத்தி கெடும். அத்தேவதைகளே வந்து கேட்டால் உணவு கொடுங்கள்.
நீங்களாக வரவழையாதீர்கள். நீங்கள் வணங்கற்குரிய ஏக மூர்த்தியை முற்றிலும் நம்புங்கள்.
வினைவழி துன்பம் வரும். வந்தாலும் அம்மூர்த்தி வழிபாட்டில் நழுவாதீர்கள். வீடுவாசல் போகத்
தான் வேண்டும்.
" வானமிடிந்து தலையில் விழும்படி
வம்புவந்தாலும் என்னை - அந்தக்
கானமயில் முருகையன் திருவருள்
கைவிட மாட்டாதே "
என்னும் உறுதிப்பாட்டை உய்த்துணருங்கள். தன்னுயிர் போமளவும் இயேசுநாதர் கடவுளை
விடவில்லையே ! கருதுங்கள். பல தெய்வ வழிபாடுடையானொருவனை நோக்கி, " நீ யாருடைய
பத்தன் " என மற்றொருவன் வினவின், அவன் என்ன சொல்லுவான் ? பசபசவென விழிப்பானன்றே !
' ஆண்டவன் பத்தன் ' என்னலிற் சாரமில்லை ! பொது வாதலின், அன்னாற்குச் சிவ சந்நிதியிற்
பாத்தியமில்லை.
இந்நாட்டில் எழுந்த அநந்த நூல்களிலே சிவனே பிரபல மூர்த்தியாயுள்ளார். அவருக்குப் பல
வடிவமுண்டு. மண்டை மாலையும் கோர ரூபமும் உள்ளனவே என்னில், அக்கோலம் சங்கார
கிருத்திய மூர்த்தியாகிய ஒரு மூர்த்திக்குத்தான் உண்டு. சிவன் நிரம்ப அழகிய மூர்த்தி.
இரு கரங்களோடுங்கூட வருவார். இமயனுக்குக் கூட இச்சத்தியுள்ளது. இராமர் ரிஷி
பத்தராதலால் அவர் கடைசிக்காலத்தில் இயமன் ரிஷியாய் வந்தான். இயமனுக்குள்ள இச்சக்தி
சிவனுக்கா இராது? சிவனுக்குத் தன்னுபாசகர் வேண்டு முருவமெல்லாம் எடுக்கும் ஆற்றலுண்டு.
எப்போதும் மண்டை மாலையுடையவாவரென் றெண்ணற்க. எப்போதும் அவர் கொண்டுள்ள
வடிவம் மகரிஷி வடிவம். ரிஷிகளால் வேண்டப்பட்டு அவர்கட்கு நாயகமாய்ச் சிவனார்
விளங்குவர். ரிஷிகளை அரசர் வணங்குவர் " திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக்
கண்டேனே " என்று புகழ்படுந் தன்மையுடையரே 'யெனினும், அரசரை ரிஷிகள் வணங்கார்.
இப்பெருமையுடைய ரிஷிகளுந் தேவர்களும் மனிதர்களும் மகரிஷி சிவனென்றுணர்மின்.
ஆதலின் ; அவரை வணங்hகுவோரே மோக்ஷம் பெறுவர். பிற தேவரெவரும் தம்முபாஸகர்
மனிதரால் வந்த பிறகுதான் தம் கதி கொடுப்பர். ஆனால் கதி நாயகரான சிவனாரோ அஃறிணை
யுயிர்ப் பொருள்கட்கும் பரகதி கொடுத்துள்ளார். குரங்கு, கரிக்குருவி, பைஞ்ஞூலி, வாழை
முதலியவற்றிற்கும் முத்தி நல்கிய செய்தி கருதுக.
இது காறும் விவரித்தவாற்றால் சைவர்க்கு வாய்த்த சிவமாந் தெய்வமும், சிவமந்திரமும்
உபகரணமும் பெருஞ் சிறப்புடையன என்பது போதரும். இப்பெரும் ஆதிக்கியத்தைக் கைவிட்டு
சைவர் ஏன் விலக வேண்டும் ? கிறிஸ்துவர், முகம்மதியர், பௌத்தர் முதலிய மதத்தினர் தத்தம்
நிலை நல்லதென்று கொண்டு அதன் நெறியிற் செல்லா நிற்க, சைவர் மட்டும் ஏன் தங்கள்
பெரும் பாக்கியத்தை உதைத்துத் தள்ள வேண்டும் ? இது பெரும் பாவமாகுமன்றோ !
இங்கோர் மறைபொருளாயுள்ள உண்மையை விளக்குவல் திரிகால ஞானமுடையாரை அது
கொண்டே ஞானி யென்னல் கூடுமோ என்பது விடயம். சிவஞானங் கொண்டு பார்த்தால் திரிகால
ஞானமட்டுமல்ல, பதிஞானமுமுண்டாம். இப்பதி ஞானத்தால் பார்ப்போர்க்கு உலகம் தோன்றாது.
வெளியே பன்னிரண்டங்குலம் ஓடும் வாயுவை ஆறங்குலத்தி லடக்கும்போது, திரிகால
ஞானமுதிக்கும். அந்நிலையிலும் ஆன்ம தரிசனம் வாய்ப்பதில்லை. மனம் பக்குவப்பட்டு நிற்பதே
கிட்டிய பயன். அது ஆத்ம சக்தி சிவசக்தி யன்று. அது உட்கண் மனநிரோதத்தில் திறக்கும். அதுவே
சிவஞானமன்று சிவஞானத்திற்கு மிகவும் தாழ்ந்தது. சிவனை விட்ட எந்த ஞானமும்
பிரயோஜனப்படாது. உட்கண் திறக்கப் பெற்றானொருவன் சிவன துருவத்தைப் பார்க்கவும் கூடும்.
எனினும் அதனாலேயே அம்மூர்த்தியின் சிநேக பாத்தியம் கிடைத்துவிடாது. அப்பாத்தியத்தைச்
சம்பாதிக்க வேண்டும். சிவனடியவன் என்னுந் தன்மைக்கு இந்தத் திரிகால ஞானமுங் குறைந்ததே.
இனிச் சிவனுடைய எட்டு மூர்த்தங்களாவன ஐந்து பூதங்கள் சூரிய சந்திரர்கள், ஆன்மா என்பன.
சிlத்து, அசித்து, சிதசித்து எல்லாமிவற்றிலுண்டு. அநுக்கிரகார்த்தமாக அவர் கரசரணாதிகளோடு
தோன்றி யருளுவர். ஆன்மாவில் அவர் அந்தரியாமியாயிருத்தலால் அவரைப் பற்றிப் பிடிக்கு
மாற்றில் மனிதர் வேறுபாடுடையராயுள்ளார்கள். சைவர் சிவனென்னு மூர்த்தியைச் செவ்வனே
பற்றி வழிபடக்கடவர். இன்றேல் உயர்கதி வாய்க்காது. பல தெய்வ வழிபாடு வியபிசாரம்
போன்றது. வெளிப பூசைகளினும் உட் பூசைகளே சிறந்தவை.
" யதா சர்ம வதாகாசம்
வேஷ்ட யிஷ்யந்தி மாநவா
ததா சிவமவிஜ் ஞாய
து : கஸ்யாந்தே பவிஷ்யதி "
என்ற சுவேதாசுவதரச் சுருதியைக் கருதுக.
{ இதன் பொருள் ; எப்பொழுது மனிதர்கள் ஆகாயத்தைச் சர்மமாக எடுத்துப் போர்த்துக்
கொள்வார்களோ, அப்பொழுதுதான் சிவஸேவையின்றித் துக்கமற்ற மோக்ஷத்தை
யடைவார்கள். }
சிவ சேவை இல்வழி எந்த ஞானமும் கீழ்ப்பட்டதே.
சிவனை அறிந்தன்றி மிருத்தியுவைத் தாண்ட வியலாதென்றும் பிரபல சுருதி முழங்கும். ஆனால்
" காண்பாரார் கண்ணுதலாய்க் காட்டாக்காலே " என்பதையும் மறக்க வியலாது. காணும் வேட்கை
தேவை. பாவியாயினும் சிவ சப்தத்தால் சைவனாக வேண்டும்.
யானும் அறுமுகச் சிவனை வணங்கும் ஒரு சைவனே. யான் பிரப்பன் வலசைக் காட்டில்
நிட்டை கூடியிருந்தகாலத்து, ஒருநாள் விடியுங்காலம் சுமார் 3 மணி வேளையில்,
" நிட்டையிலிருந்தெழுந்துவிடு "என்னுமொரு சப்தம் எனக்குக் கேட்டது. 'எழேன் ' என்று இருந்த
விடத்திருந்தேன்.. " நீ எழுந்துவிட வேண்டும் " என்று முன்னிலும் பெருத்ததோர் தொனி உண்டாயது.
அதற்கும் யானசையவில்லை. ' ஏகாதச ருத்திரர் வருகின்றனர் எழுந்திரு ' என்னும் ஆணை பிறந்தது.
" முருகவேளாணை வரினல்லது எழுந்திரேன் "என்று எனக்குள் விடையிறுத்தேன். பின்பு ' முருகனே
இக்கட்டளையை யிடுபவன் " என்று உணர்த்தப்பட்ட வளவில் வணங்கி எழுந்தேன். இதுபோன்றதோ
ருறுதியோடு நின்றாலன்றி எப்பேரும் பேற்றையும் அடைய இயலாது. ஆதலின் நன்னெறியில்
இயன்றமட்டும் உறுதியோடு நின்மின்கள்.
வெளிப்பூசைகளில் மாகேச்சுர பூசை சிறந்தது. சிவனடியார்க்குத் திருவமுது செய்விப்பது
மாகேச்சுர பூசை. மெய்யடியாரைக் கண்டுபிடித்தலருமை யாதலின், அப்பூசையைப் பொதுவாகச்
செய்க. இதற்குபகாரமாக வேறெதைச் சேர்க்கினும் சேர்க்க. ஆனால் இதைக் கைவிடற்க.
உட்பூசை செய்யும் வழிகளைப் பற்றிப் பலர் பல கூறுப. விளக்கப் போல்பாவனை செய்யென்பாரும்.
சூரியனைப் போற் பாவனை செய்யென்பாரும், காதிற் கேட்கு மோசையில் கருத்தை நாட்டுக
வென்பாரும் இவை போல் வேறு பல விளம்புவாருமுளர். ஆனால், இறைவனைக் கரசரணாதி
அவயங்களோடு தியானிக்கவென்றே யான் கூறுவேன். இரவுபகலாய் இந்நாட்டம் உங்களிடம்
பெருகினால் நீங்கள் பரம யோகிகளாவீர்கள். அநவரதமு முடியாவிடுணும், உண்ணுமுன்
மூன்று வேளையாவது சிவனைச்சிந்தை செய்மின். நாள் தோறும் விடியற்காலையில் கைகால்
சுத்திசெய்து, அரைமணி நேரமேனும் அம்மூர்த்தியை முறைப்படி நினைமின். அதனால் எல்லா
நன்மையுமுண்டாம். இவ்விருவகைப் பூசைகளையும் டம்பத்திற்காகச் செய்யன்மின். உள்ளும்
புறமும் ஒத்த உண்மை அன்போடு செய்மின். முருகவேள் உங்களெல்லோர்க்கும்
தன்னின்னருளை வழங்குமாக !
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
இது, சென்னை, இராயப்பேட்டை ஸ்ரீ பாலசுப்பிரமணிய பக்தஜன சபையின் ' குகானந்த நிலையத்தில் '
17 - 02 - 1919 -ல் ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் செய்தருளியதொரு அரிய விரிவுரையின்
சுருக்கமாகும்.
அவ்விரிவுரை நிகழ்ந்தபோது யான் எழுதிவைத்த குறிப்புகளின் துணைகொண்டு இந்தக் கட்டுரையை
இப்போது வரைந்துள்ளேன். பன்னீராண்டுகட்கு முன்னர் எடுத்த குறிப்பை விரித்தெழுதுங்கால்,
எழுதும் என்னறியாமையாலும் மறதியாலும் குறிப்பின் குறைபாட்டாலும் பல பிழைகள் நேருதல்
கூடும். ஆயினுமிதில் என் கருத்தெதையும் சேர்த்திலேன். இதிற் காணும் குறைகளனைத்தையும்
சிறியேனுக்கும், நலங்களனைத்தையும் அடியேன் ஆசிரியராகிய ஸ்ரீமத் சுவாமிகளுக்கும் உரிமை
யாக்குதல் அறிஞர் கடன்.
குறிப்பு நினைப்பூட்டு மளவில், கருத்துக்கள் மட்டமன்றிச் சொற்களும் சுவாமிகளுடையனவாகவே
இருக்க வேண்டுமென்னும் நோக்கத்துடன் இதை எழுதுகின்றேன்.
ச.சச்சிதானந்தன்
( 1931 )
No comments:
Post a Comment